வட பகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு : அணைக்கட்டு உடையும் அபாயம் காரணமாக மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!!

347


TR

வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



ரயில் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் ரயில் சாவஸ்திரிபுர வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



மேலும் கொழும்பு – கோட்டையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் கூறியுள்ளது.



அத்துடன் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் கல்கமுவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


மழை நீர் வடிந்ததும் நிலைமை வழமைக்கும் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அநுராதபுரம் குவிச்சன்குளத்தின் அணை உடைப்பெடுக்கும் அபாயம் தோன்றியுள்ளதால், குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நகர ஆணையாளர் சம்பத் ரோஹண தெரிவிக்கின்றார்.


நிலவுகின்ற அதிக மழையின் காரணமாக குளம் ஏற்கனவே வான் பாய்வதாக நகர ஆணையாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து மக்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நகர ஆணையாளர் கூறினார்.