மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.க அரசாங்கம் விரைவில் உருவாகும் : எதிர்கட்சித் தலைவர்!!

316


Nimal

தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கலப்பு உணர்வுகளுடன் புதிய கலாசாரத்தை நோக்கி செல்ல வேண்டிய பதவி என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.



இதனடிப்படையில் செயற்படும் போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என கொழும்பு சேர் மார்க்ஸ் பெர்ணாந்து மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அரசியல் பாத்திரமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலமே உருவாகினேன். எனது உடலில் ஓடுவது அந்த இரத்தம். இதனால், கட்சியை பாதுகாப்பதற்காகவே நான் முன்னுரிமை வழங்குவேன். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதால், கட்சியினை மேலும் வலுப்படுத்த அது உதவியாக அமையும். ஜனாதிபதி கட்சியின் தலைமை பதவியை ஏற்று இரண்டாக பிளவுபடுவதை தடுத்து காப்பாற்றினார்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கம். இதற்காக அனைவரும் பொறுமையாக செயற்பட வேண்டும்.



அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் சேவைகளை செய்துள்ளார். அதனையும் இந்த சந்தர்ப்பத்தில் கட்டாயமாக நினைவுக்கூற வேண்டும். நாங்கள் அங்கம் வகித்த அரசாங்கத்தில் குறைபாடுகள் பல இருந்தன என்பதை ஏற்றுக்கொள்கிறோம்´ என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.