பரபரப்பான போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி!!

557


Australia v New Zealand - 2015 ICC Cricket World Cup

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.



உலகக்கிண்ண சுற்றுத்தொடரின் 20வது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப் பரீட்சை நடாத்தின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய வீரர்கள், நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அவுஸ்திரேலிய அணி 32.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் 151 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.



அவுஸ்திரேலிய அணி சார்பாக ஹடின் 43 ஓட்டங்களையும், வோனர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூசிலாந்து அணி சார்பாக போல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுத்தி, விட்டேரி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.



பின்னர் 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 161 பந்துகள் மிச்சமுள்ள நிலையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும் தொடர்ந்து விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 146 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை இழந்து வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் வில்லியம்சன் ஆறு ஓட்டம் ஒன்றை பெற்றதன் மூலம் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

நியூசிலாந்து அணி சார்பாக பிரெண்டன் மக்கலம் 50 ஓட்டங்களையும் வில்லியம்சன் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


அவுஸ்திரேலிய அணி சார்பாக நியூசிலாந்து வீரர்களை மிரள வைத்த ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.