இங்கிலாந்து வீரரின் உடலை குறிவைத்து பந்துவீசியதாக சுரங்க லக்மல் மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை!!

513


Lakmal

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர் சுரங்க லக்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.



உலகக்கிண்ணத் தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை- இங்கிலாந்து அணிகள் நேற்று வெலிங்டன் மைதானத்தில் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 309 ஓட்டங்களை குவித்தது.

ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச பந்து வீச்சாளர் சுரங்க லக்மலை அழைத்தார் இலங்கை அணித்தலைவர் மத்யூஸ். அப்போது துடுப்பாட்டக்காரர் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி நேராக பந்தை வீசினார் சுரங்க லக்மல்.



இதையடுத்து களநடுவர்கள் உடனடியாக அவருக்கு எச்சரிக்கை விடுத்து சரியாக பந்தை வீசுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர் நடுவர்களின் எச்சரிக்கையையும் மீறி, அடுத்த பந்தையும் அதே பாணியில் வீசினார்.



இதைத் தொடர்ந்து 4 பந்துகள் வீசியிருந்த நிலையில், அவரை பந்து வீசக்கூடாது என்று தடுத்த களநடுவர்கள், போட்டி ரெஃப்ரி டேவிட் பூனிடம் இது குறித்து புகார் அளித்தனர்.


இதனிடையே, லக்மலின் செயலுக்காக போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி நடத்தை விதிமுறைகளின் 1வது பிரிவின்கீழ் இது மிகப்பெரும் தவறு மற்றும் தடை செய்யப்பட்ட பந்து வீச்சு முறையாகும்.


இதுகுறித்து டேவிட் பூன் கூறுகையில், “அது ஒரு ஆபத்தான மற்றும் நியாயப்படுத்த முடியாத பந்து வீச்சாகும்” என்று தெரிவித்துள்ளார்.