வவுனியா சிதம்பரபுரம் மக்களின் காணிப் பிரச்சினைக்கு முடிவு இல்லையேல் தொடர்ச்சியான தெருவோர உண்ணாவிரதப் போராட்டம் : ப.உதயராசா!!

288

Uthayarasa

மைத்திரிபால தலமையிலான அரசாங்கம் ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்த மக்களிற்கான நூறுநாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்த முன்வரவேண்டும் என்பதுடன் அந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பழிவாங்கல் அரசியல் கலாச்சாரத்தை விடுத்து வடக்கு கிழக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீளவும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்விடுகின்றோம் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஐம்பது நாட்கள் கடக்கின்ற நிலையில் உருப்படியான எந்த நன்மைகளையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்த அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு என்ற போர்வையில் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் ஆழ்ந்த கவலைஅடைகின்றோம்.

ஏனெனில் முன்னைய அரசாங்கம் கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கு உள்ளிட்ட பாரியளவு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்தது. அத்தகைய அனைத்து திட்டங்களையும் மீளாய்வு செய்வதாயின் நூறு நாட்கள் அல்ல ஐந்து வருடங்கள் கடந்தாலும் புதிய அரசினால் முடியாது.

இந்நிலை தொடருமாயின் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் அபாயம் உருவாகும். எனவே நல்லாட்சி என்பது அபிவிருத்தித் திட்டங்களை மறுபரிசீலனை செய்வதில் மாத்திரம் தங்கிவிடவில்லை அதனை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவதிலுமே தங்கியுள்ளது.

ஆகவே வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதிய அரசாங்கம் மீளவும் ஆரம்பிக்க முன்வரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

எமது கட்சியால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த வடக்கு கிழக்கு மக்களின் காணி உரிமம் மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சனைகளை நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் துரிதப்படுத்தப்பட வேண்டும் என புதிய அரசை கோருகின்றோம்.
யுத்தம் முடிவடைந்து ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் தமிழ் மக்கள் அகதிமுகாங்களில் வாழ்கின்ற சூழ்நிலையே காணப்படுகின்றது.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டு வவுனியா பூந்தோட்டம் அகதி முகாம் மற்றும் சிதம்பரபுரம் அகதிமுகாம்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் இங்கு வாழுகின்ற மக்களின் காணி உரிமம் மற்றும் மீள்குடியேற்ற பிரச்சினைகளை தங்களின் தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்தி வருவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
எனவே நூறு நாள் வேலைத்திட்டத்திற்குள் இந்த மக்களின் வாழ்வியல் அடிப்படை பிரச்சினைகள் தீர்ப்பதற்கான நடவடிக்கையை புதிய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் அந்த மக்களுடன் இணைந்து தொடர்ச்சியான தெருவோர உண்ணாவிரதப் போராட்டத்தை நானும் எனது கட்சியும் முன்னெடுக்கும் சூழல் உருவாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.