வவுனியா இலங்கை  மின்சார சபை பாவனையாளர் சேவை நிலையத்தினரின் வாடிக்கையாளர் சேவை  தொடர்பாக பொதுமக்கள் விசனம்!!

489

ceylon-electricity-board

வவுனியாவில்  இலங்கை மின்சார சபையினரின் சேவைகள் தொடர்பாக இன்னமும் பொதுமக்கள் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார பாவனையாளர் சேவைநிலையம் மற்றும் பிரதம பொறியியலாளர் பணிமனை என்பவற்றுகிடையில் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் பாவணையாளர் சேவை நிலையத்தில் உள்ள காவலாளி தன்னுடைய கடமைக்கு மேலதிகமாக பாவணையாளர் சேவையினையும் வழங்கி சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள்  அவரே விசாரித்து  அவர்களை வாயிலிலேயே வைத்து திருப்பி அனுப்பி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாவணையாளர் குறைகள் நிவர்த்தி செய்வதற்கென  அலுவலகத்தினுள் அதிகாரிகள் இருந்தும் திங்கட்கிழமை  மற்றும் புதன்கிழமை என்பவற்றை பொதுமக்கள் சந்திப்புக்கென ஒதுக்கி அதனையும் மதியம் ஒரு (1.00PM) மணிவரை மட்டுப்படுத்தி அதன்பின்பு வருகின்ற  வாடிக்கையாளர்களுக்கு காவலாளியே பதில் கூறி அனுப்புகின்ற நடைமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

திங்கள் மற்றும் புதன்கிழமை என்பவற்றை அலுவலக நாட்களாக வைத்திருத்தல் என்பது வழமையான நடைமுறையாக இருக்கின்ற பொழுதும் அதனை பிற்பகல் மூன்று அல்லது நான்கு மணிவரையாவது தொடர்ந்தால் பாடசாலையில் கடமைபுரிகின்றவர்கள்  தங்களுடைய தேவைகளை இரண்டுமணிக்குப் பின்னர்தான் மேற்கொள்ளவேண்டிய  சூழ்நிலை உள்ளமையால்  பாவணையாளர் சேவை நிலைய அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவது விரும்பத்தக்கது .

அத்துடன் மின்சார பாவணையாளர் சேவை நிலையத்திற்கு வருகின்ற பொதுமக்கள் யாவரும் நகரில் இருந்து வருபவர்கள் அல்ல என்பதை அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். இந்த முறைப்பாட்டினை  எழுதுகின்ற  வாடிக்கையாளரான நான்  சுமார் ஒருவருடமாக   அலைக்கழிக்கபடுவதும்  அதன் போது நான் அவதானித்த விடயங்களையுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

படித்த மற்றும் பாமரமக்கள்  அலுவலகத்துக்கு வருகின்றபோது அவர்களுக்குரிய பிரச்சனைகளுக்கு உரிய பதிலை அல்லது அறிவுறுத்தல்களை தெளிவாக பாவணையாளர் சேவை நிலையத்தில் இருக்கின்ற   அதிகாரிகள்  வழங்கவேண்டும். மிகவும் தூர இடங்களிலிருந்து வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு தெளிவான அறிவுறுத்தலை வழங்கவேண்டியது வாடிக்கையாளர் சேவை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களது கடமையாகும்.

பொதுமக்கள் ஒரு மின்இணைப்பைப் பெறுவதற்கு எந்தனை தடவைதான்  அலுவலகத்திற்கு அலைக்கழிக்கபடுகின்றனர். அதுவும் சிலசமயங்களில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில்  கடமையாற்றும் ஒரு சில  ஊழியர்களின் சில்லறைத்தனமான பதில்களால் பாவணையாளர்கள் விசனமடைந்துள்ளனர். அதாவது முறைப்பாட்டை  பதிந்து ஒரு பற்றுசீட்டு வழங்கிவிட்டு   வருவார்கள், பார்ப்பார்கள் என பதிலளித்துவிட்டு அடுத்த வாடிக்கையாளர் பிரச்சினையை பார்க்க தலைப்படுகின்றனர்.

மீண்டும் அதே பற்றுசீட்டுடன்   குறித்த வாடிக்கையாளர்  வருகின்றபோது   தாமதத்திற்கு அல்லது இடையூரிற்கு  மன்னிப்பு கோருவதைவிடுத்து  மீண்டும் பழைய பல்லவியாக முதல்வாரம் கொடுத்த பதிலையே திரும்பக் கொடுப்பதும் அல்லது  எங்களுக்கு நீங்கள் மட்டும்தான் வாடிக்கையாளர் அல்ல ஏராளமான பாவணையாளர்களது  பிரச்சனைகள் உள்ளது. நீங்கள் முறைப்பாடு செய்துள்ளீர்கள் எங்களுடைய சேவைபிரிவினர்  வருவார்கள் என்பதும் அல்லது பிரதம பொறியியலாளர் பணிமனைக்கு செல்லுங்கள் எனச்  சொல்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

CEB_CI

(மேலும் எமக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்று)  எனது பிரச்சினை தொடர்பாகவும் சிலவற்றை இங்கு தெளிவு படுத்தவிரும்புகிறேன். எனது வீட்டு மின்மானி தொடர்பாக கடந்த வருடம் முறைப்பாடு செய்து அவர்கள் பரிசோதனை மின்மானி (Test Meter ) பொருத்தி அதனை மீண்டும் கழற்றிப் போனார்களே தவிர அது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மீண்டும் நான்  எமது மின்மானி தொடர்பாக முறைப்பாடு செய்யச் சென்றபோது அவர்கள் என்னை பிரதம பொறியியலாளர் பணிமனைக்கு அனுப்பி  பரிசோதனை மின்மானி சம்பந்தமான அறிக்கையை வாங்கி வரும்படி அனுப்பினர். ஆனால்  சேவைப்பிரிவினரால்  அந்த அறிக்கை வழங்கங்கபட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்  பிரதம பொறியிலாளர் அலுவலகத்தினால்  மீண்டும் ஒருவாரத்தின் பின் புதிய மின்மாணியை மாற்றுவதற்கான  கட்டளை வழங்கப்பட்டும்(REF:CM132)  இன்னமும் புதிய மின்மானி பொருத்தப்படபடவில்லை. அதற்கும் பாவனையாளர் சேவை நிலையம் உரிய கருவிகள் இல்லை அது வந்தவுடன் பொருத்துகிறோம் என காலம் கடத்தி வருகின்றனர். என்பதை மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்..

இனி வரும்காலங்களிலாவது மின்சார பாவனையாளர் சேவைநிலையம்   மற்றும் அதன் வாடிக்கையாளர் சேவை நிலைய உத்தியோகத்தர்களது தரமான சேவையை எதிர்பார்க்கின்றோம். எதையும் உயரதிகாரிகள் மட்டத்தில் எடுத்து சென்று அவர்களின் சிபாரிசின்மூலம் செய்வது எளிதான விடயமாக இருந்தாலும் கீழ்மட்டத்தில் உள்ள உத்தியோகத்தர்களை நாடிச்சென்று ஒரு சேவையினை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதென்பது கல்லில் நார் உரிக்கும் செயலுக்கு ஒப்பானதாகவே காணப்படுகிறது. இது மின்சார சபையில் மட்டுமல்ல அனைத்து அரச அலுவககங்களிலும் உள்ள ஒரு பொதுவான நிலைப்பாடாகவே உள்ளது.

அத்துடன் பாவணையாளர் சேவை அலுவலக அதிகாரிகள் பொதுமக்களை நேரடியாக சந்திக்கக் கூடியவகையில் பாவணையாளர் சேவை மாற்றியமைக்கப்படவேண்டும். காவலாளி அலுவலக  உத்தியோகத்தர்கள் சார்பில் பதிலளிப்பது மற்றும் வாசலுடன் திருப்பியனுப்புவது போன்றவிடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை   மேற்கொள்ளவேண்டும் என்பதும் எமது விருப்பமாகும்..

மேலும் பாவணையாளருக்கு இலகுவாக விளங்கக் கூடிய வகையில் அறிவுறுத்தல்கள்,  அலுவலக கடமைநேரங்கள், பாவனையாளர் சந்திப்பு நேரங்கள் மற்றும் கட்டண விபரங்கள் சேவைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளை காட்சிபடுத்தல்  சாலப்பொருத்தமானதாகும்.

(இக்கட்டுரை தனிப்பட்ட பிரச்சனையின் பேரிலோ அல்லது நிர்ப்பந்தத்தின் பேரிலோ எழுதபட்டது அல்ல. மாறாக இது பாவனையாளர்சேவை  முறைபாடுகள் தொடர்பாகவே எமக்கு கிடைத்தவற்றை கொண்டு இச்செய்தி பிரசுரமாகிறது)