முல்லைத்தீவு கொக்கிளாய் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிய ஒளி உதவும் கரங்கள் அமைப்பு!!

937

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராம பாடசாலையான கொக்கிளாய் அ.த.க.பாடசாலையின் மாணவர்களுக்கு நேற்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.

முதலாம் தரத்தில் இருந்து சாதாரணதரம் வரையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்நிகழ்வில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு புத்தகப்பை, குறிப்பு நூல்கள், கணிகருவிப்பெட்டி, காலணிகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் தரம் 5 மாணவர்களுக்கான புலமை மஞ்சரி தொகுப்பு என்பன வழங்கப்பட்டிருந்தன.

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் தாயக மாணவர்களின் சீரான கற்றல் செயற்பாட்டை உறுதிசெய்யும் பொருட்டு சாதிக்கும் சந்ததி செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டுவருகிறது.

அந்தவகையில் அச்செயற்திட்டத்தின் பத்தாவது கட்டமானது சுவிற்சலாந்து ஜெனிவாவிலுள்ள ஒளி உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்ததாக கொக்கிளாய் அ.த.க.பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கும் நோக்கோடு கடந்த 2015-03-31 அன்று காலை பத்து மணியளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றிருந்தது.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கொக்கிளாய் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களான புத்தகப்பை, குறிப்பு நூல்கள், காலணி, கணிகருவிப்பெட்டி என்பன வழங்கப்பட்டிருந்தன.

நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை உறுப்பினரும் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் முன்னெடுப்பாளருமாகிய ரவிகரன் அவர்கள்,

பாடசாலை மாணவர்களின் சீரான கற்றல் செயற்பாடுகளை கற்றல் செயற்பாடுகளை உறுதிசெய்யும் வகையில் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தின் பத்தாவது கட்டமானது சுவிற்சலாந்து நாட்டில் உள்ள ஒளி உதவும் கரங்கள் அமைப்பின் கைகொடுப்பில் சாத்தியமாகி இருக்கிறது.

இதுவரை இச்செயற்திட்டத்தின் ஒன்பது கட்டங்கள் மூலம் 607 மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் உள்வாங்கப்படும் 96 மாணவர்களுடன் இச்செயற்திட்டம் 703 மாணவர்களை உள்வாங்கியிருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக இருந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் இன இருப்பை தொடர்ந்து தக்கவைக்கும் கொக்கிளாய் கிராமத்தில் உள்ள ஒரேயொரு பாடசாலையாக கொக்கிளாய் அ.த.க.பாடசாலை காணப்படுகிறது.

இப்பாடசாலையில் தொடர்ச்சியான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் மாணவர் கற்றல் ஊக்குவிப்புகளுக்கும் எப்பொழுதும் எமது பங்களிப்பு இருக்கும் என்பதை இங்கு தெரிவிப்பதோடு

மென்மேலும் புலம் பெயர் ஈழத்தமிழ் உறவுகளின் பங்களிப்பில் இன்னும் பல மாணவர் கற்றல் ஊக்குவிப்பு செயற்திட்டங்கள் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை, குறிப்பு நூல்கள், கணிகருவிப்பெட்டி, காலணிகள் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான புலமை மஞ்சரி என்பன வழங்கப்பட்டிருந்த இந்நிகழ்வானது பாடசாலை ஆசிரியர் தலைமையில் நடைபெற, இந்நிகழ்வின் நன்றியுரையை பாடசாலை ஆசிரியர் திரு.சுதர்சன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

1 2