வவுனியா தமிழ்மாமன்றதின் ”தமிழ் மாருதம் – 2015” ஒரு பார்வை!(விமர்சனங்கள் வரவேற்பு!)

477


வவுனியாவில் ”தமிழ் மாருதம் – 2015” – ஓர் பார்வை

20150412_105125



வவுனியா தமிழ் மாமன்றத்தின் ஏற்பாட்டில்.12.04.2014அன்று . வவுனியா கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது தமிழ் மாருதம் நிகழ்வு.

பொது நூலக சரஸ்வதி சிலைக்கருகில் ஆரம்பித்த ஊர்வலம் பிரதான மண்டபத்தினை வந்தடைந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.



தமிழர் கலைகலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை வெளிக்காட்டிய கலைநிகழ்வுகளோடு காலை அமர்வாகவும் மாலை அமர்வாகவும் நடைபெற்றது. மாமன்றத்தலைவர் இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.



அரங்கானது வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. தமிழர் மரபுக் குடில் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியப் பொருட்கள் என்பவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மன்றத்தைச் சேர்ந்த வைஸ்ணவனின் ஒழுங்கமைப்பில்..இக்கலைவண்ணத்தின் கற்பனையாளர்.. முள்ளியவளையைச் சேர்ந்த பிரபல நடிகரும் ஒப்பனையாளரும் கலைஞனுமாகிய என் எஸ் மணியம் அவர்களின் புதல்வர் சித்திரபாட ஆசிரியர் கௌரீஸன் ஆவார்.


காலை நிகழ்வுகள்
**************************


காலை 8.45 மணிக்கு வவுனியா பொது நூலகத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி நகரசபை மண்டபத்தை வந்தடைந்தது. மங்கல விளக்கினை தமிழ் மாமன்றப் போசகர் அருணா செல்லத்துரை அவர்களும் அவர் தம் பாரியாரும் ஏற்றிவைத்தனர். தமிழ்மணி அகளங்கன் அவர்களால் எழுதப்பட்ட ”இசைத்திட முடியாது எங்கள் பெருமை” எனும் தமிழ் மொழி வாழ்த்தினை கானப்பிரசன்னா இசைக்க.. தொடக்க உரையினை மனநல மருத்துவர் சிவதாஸ் அவர்கள் வழங்கினார். தாய்மொழி தினம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கியிருந்தார். தொடர்ந்து துணைவியுர் கேசவன் தலைமையில் ”சுழலும் சொற்போர்” பாடசாலை மாணவர்களை முழுமையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. அது அவர்களது பரந்த தேடலையும் அறிவுப்பசியினையும் காட்டியிருந்தது. தொடர்ந்து.. நாடகம்….! தலைப்பு ”ஆண்பால்”. சுருக்கக்கருவை சட்டப்படி சொல்லியிருந்தார்கள். அதனை கலை நிலாக்கலையகம் பெருமையுடன் வழங்கியிருந்தது. முடிவும் நல்லாத்தானிருந்தது. அதாவது.. பெண்களைப்போல் ஆண்களுக்கும் (தப்பான உறவில்) கருத்தரிக்கும் வசதியிருந்தால் (சாபமிட்டால்).. நிறைய வெள்ளை போத்த கள்ளர்கள் வயித்தைத் தள்ளிக் கொண்டுதான் திரிவார்கள். நகைச்சுவையாக.. நாசுக்காக.. செப்பியமை வரவேற்பை பெற்றிருந்தது. காலை நிகழ்வின் இறுதியாக வற்றாப்பளை ம.வி மாணவர்களின் ”நாட்டார் பாடல்” மேடையேற்றப்பட்டது. மருத நிலத்து வாசம் இசைக்காமலேயே வீசியதை உணரக் கூடியதாக இருந்தது. அது அபிநயத்திலும் தெரிந்திருந்தது.

மாலை நிகழ்வுகள்
***************************
மாலை 4.10 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வை வ/சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க தலைவர் சேனாதிராசா அவர்தம் பாரியார் சகிதம் ஏற்றிவைத்தார். ”இசைத்திட முடியாது எங்கள் பெருமை” எனும் தமிழ் மொழி வாழ்த்தினை செல்வன் வசந் இசைத்திட நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருமதி அகிலா செந்தூரனின் நெறியாள்கையுடனான வரவேற்பு நடனத்தினைத் தொடர்ந்து உடுவை தில்லைநடராஜா அவர்களின் தொடக்கவுரை நடைபெற்றது. உடுவை ஐயாவை இப்ப அடிக்கடி வவுனியாவில காணக்கூடியதாக இருப்பதாக பலரும் பேசிக்கொண்டனர். இப்பவல்ல எப்பவும் அவரைக்காணலாம் எனும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. தொடர்ந்து ”சும்மா இருக்க சுகமான இடம்” கவியரங்கம். கவியரங்கம் சில வேளை ”கடியரங்கமாவதும் உண்டு. அரசியல் ஆங்காங்கே அரசல் புரசலாக உரசிச்சென்றாலும்… நகைச்சுவையுடன் கூடிய ஓர் ஜதார்த்த அரங்காக இருந்தது. தலைவர் தனக்கேயுரிய பாணியில் நகர்த்தியிருந்தார். அவர் வேறுயாருமல்ல.. கவிஞர் சடகோபன்தான். உண்மையில் சிறப்புத்தான். கைதட்டல்களுக்கு குறைவிருக்கவில்லை. சுகமான இடம் தேடி சூடு ஆறுவதற்கிடையில் நாட்டிய நாடகம் இருக்கையை விட்டு பார்ப்போரை எழுப்பிவிட்டது. வவு/நிருத்திய நிகேதன கலாமன்றம் வழங்கிய ”ஆணவ வதம்” எனும் இவ் நாட்டிய நாடகத்தினை தமிழ்மணி அகளங்கன் அவர்கள் எழுதியிருந்தார்கள். இரணியன்… யப்பா…! அப்படியொரு மிடுக்கு. குட்டிப்பிரகலாதன் , பெரிய பிரகலாதன் , நரசிம்மர்.. மற்றும் மாணவரின் நடிப்புக்கள் பிரமாதம் தான். மாலை நிகழ்வின் இறுதியில் அரங்கின் நிறைவாகவும்.. அரங்கை நிறைப்பதாகவும் அமைந்திருந்தது.. பட்டிமண்டபம். இலக்கியச்சுடர் கதிர்காமசேகரன் மற்றும் சொற்சிப்பி லலீசன் ஆகியோர் நடுவர்களாகக் கடமைபுரிந்தனர். ”மாயையின் சூழ்ச்சியில் விழுந்த பின் சோகம் யாருக்கு” என்பதே தலைப்பாகும். தருமன் என்றும் இராமன் என்றும் கோவலன் என்றும் வாதப்பிரதிவாதங்கள் முன் வைக்கப்பட்டன. அப்பப்பா… சிறிசேனாவை சிரிக்கச்சொன்னார்கள். கடவுள் விக்கினேஸ்வரனை காப்பாத்தக் கேட்டார்கள். அரங்கமே ஓரே சிரிப்புத்தான். இடையிடையே கடுப்பாகவும் இருந்தார்கள். ஆனாலும் முடிவு என்னமோ.. கோவலன் சார்ந்தே அறிவிக்கப்பட்டது. அதற்கான காரணங்களை நடுவர்கள் துல்லியமாக விபரித்திருந்தனர். கடைசியில்.. மாமன்றச் செயளாளர் நிக்ஸ்சலனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.

எனது பார்வை
********************
படித்த இளையவர்களின் ஒன்றிணைவில் ”தமிழ் மாமன்றம்” ஆரம்பிக்கப்பட்டு 2014ல் ”இயல் விழாவை” க் கண்டிருந்தது. 2015 ல் ”தமிழ் மாருதம்” விழாவை ஒரு தமிழ்த் திருவிழாவாக காட்டியிருக்கிறது. வரவேற்புக்கள் மனம் நிறைந்திருந்தன. அரங்கம் தயாராகும் போது திரைக்கு வெளியிலிருந்த தொழில் நுட்பத்திரையில் படக்காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இது பார்ப்போரை கவனக்கலைப்பிலிருந்து காப்பாற்ற எடுக்கப்பட்ட ஓர் உத்தியாகும். பிரமாண்டமான மேடையில் பின்புறக் காட்சிகள் தூரப்பார்வைக்கு நல்லாத்தானிருந்தது. வ/தமிழ் மாமன்றத்தில் முல்லைத்தீவு அதிகம் இணைக்கப்பட்டிருந்தது. அடிக்கடி பேசு பொருளாகவும் காணப்பட்டிருந்தது. உண்மையில் அரசியல் பிரமுகர்கள் முக்கியப்படுத்தப்படுவதற்குப் பதிலாக இலக்கிய பெரு மனிதர்கள் முக்கியப் படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பட்டிமண்டபத்தில் இடையிடையே மேடையிலிருந்தவர்கள் அகளங்கன் ஐயாவை குருவெனவும் தம்மைச் சிசியர்கள் எனவும் விளித்ததையும் காணக்கிடைத்தது. ஒவ்வொரு நிகழ்வும் முடிய.. அதன் நினைவாக.. மாமன்றப் போசகர் ”அருணா செல்லத்துரை” அவர்களும்.. தமிழ் மணி ”அகளங்கன்” அவர்களும்.. உடுவை ”தில்லைநடராஜா” அவர்களும் நினைவுப்பரிசில்களை வழங்கிக் கௌரவித்ததையும் அவதானிக்க முடிந்தது. ஆனால்… மேடை ஒழுங்கமைப்பைக் கவனித்த மன்றத்தினர்.. பரிசில்கள் வழங்கும் போது பெறுபவர்களையும் வழங்குபவர்களையும் நிரையிறுத்துவதில் சற்று சிரமப்பட்டதைக் காணக்கூடியதாகவும் இருந்தது.

மற்றப்படி முழு நிகழ்வும் சட்டப்படி. வெறு மனதுடன் வந்தவர்களுக்கு நிறையுணவை வழங்கியது போலிருந்தது. நிகழ்வுகள் அரங்கை மட்டுமல்ல வந்தோரை வாழ வைக்கும் வன்னித் திருநாட்டின் மக்கள் உட்பட்ட தமிழ் கூறும் நன்னுலகின் வடத்தில் ஒர் தடமாகும்.


( – வே.முல்லைத்தீபன் )

வவுனியாவில் தமிழ்மாமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  முத்தமிழின் சங்கமமான  தமிழ் மாருதம் -2015  நிகழ்வு தொடர்பான ஆரோக்கியமான கருத்துக்களை  வவுனியா நெற்  பக்கம் (https://www.facebook.com/vavuniyanet1)மற்றும்  தமிழ் மாமன்றத்தின் பக்கம்(facebook.com/தமிழ் மாமன்றம் [Thamizh Mamanram] என்பவற்றில் பதிவிடலாம் ……