வவுனியா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதிக்க சென்ற பெண்ணை அடைத்து வைத்த கொடுமை!!

348

vavuniya

வவுனியா பொது வைத்தியசாலையில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியை அனுமதிக்க சென்ற வயதான பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் வார்ட்டில் ஆறு மணிநேரம் பூட்டி வைத்த சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் 13 நாட்களாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் கடந்த வியாழக்கிழமை நோயாளி குணமடைந்துவிட்டார் என்று கூறி நோயாளியின் சகோதரி வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவரின் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக அன்றைய தினமே இரவு 11.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளியை மீண்டும் உறவினர்கள் கூட்டி சென்றுள்ளனர். நோயாளியைப் பரிசோதித்த வைத்தியர், அவரை வார்ட்டில் அனுமதிக்குமாறு சிபாரிசு செய்தார்.

எனினும் வார்ட்டில் கடமையாற்றும் ஊழியர்கள் நோயாளியை அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் நோயாளியை வார்ட்டில் அனுமதித்தே ஆகவேண்டும் என கோரியதால் நோயாளியை அனுமதித்த அதேவேளை, வைத்தியசாலையின் ஊழியர்கள் மனநோயாளியின் சகோதரியையும் மனநோயாளிகள் வார்ட்டினுள் தள்ளி பூட்டி விட்டதுடன், குறித்த பெண்ணின் மகளை இரவு 12.00 மணி என்றும் பாராமல் வைத்தியசாலைக்கு வெளியே துரத்திவிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை அறித்த குறித்த பெண்ணிண் மகன், அன்றிரவே கிளிநொச்சியிலிருந்து வவுனியா சென்றுள்ளார். அங்கு தாயார் அடைத்துவைக்கப்பட்டிருந்ததை அவதானித்த அவர் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார், வைத்தியசாலைப் பொலிஸாருடன் தொடர்புகொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

மறுநாள் காலை வைத்தியசாலைப் பொலிஸார் சென்று அந்த பெண்னை விடுவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பில் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரனிடம் கேட்ட போது:- “கடந்த வெள்ளிக்கிழமை இரவு மனநோயாளி ஒருவர் எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், விடுதியில் உள்ள நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் நலன் கருதி மனநிலை பாதிக்கப்பட்டவரை நோயாளி விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.

அவரை எமது வைத்தியசாலை ஊழியர்கள் கண்காணித்தனர். இதேவேளை, குறித்த மனநோயாளி வெளியில் வரும் போது அவரது சகோதரி வெளியில் இருந்ததால் அவருக்கு நோயாளியால் ஏதாவது பாதிப்பு ஏற்படககூடும் எனக் கருதி அவரையும் வேறு ஒரு விடுதியில் தங்க வைத்தனர்.

அண்மையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வெளியில் வந்து தற்கொலை செய்து கொண்டமை அனைவருக்கும் தெரிந்த விடயம். அதனாலேயே பாதுகப்புக்காக இவ்வாறு செய்யப்பட்டது. அதனை அவர்கள் தவறாக விளங்கிவிட்டார்கள். எனக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பாபில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.” – என்றார்.

-மலரும்-

vavuniya1