வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களின் மீள் குடியேற்றத்திற்கு நடந்தது என்ன : டக்ளஸ் தேவானந்தா கேள்வி!!

302

Douglas-Devananda-Minister

வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் 1990களில் இருந்து தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 186 குடும்பங்களின் மீள் குடியேற்றத்திற்கு என்ன நடந்துள்ளது என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

1990களில் இருந்து இம் மக்கள் குறித்த நலன்புரி நிலையத்தில் இருத்தப்பட்டுள்ள நிலையில், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றியே இன்று வரையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி நலன்புரி நிலையம் அமையப்பெற்றுள்ள பகுதியிலேயே தங்களை மீளக் குடியமர்த்துமாறு இம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது பிரஸ்தாபிக்கப்பட்டு, அக் காணிகள் இம் மக்களது மீள் குடியேற்றத்திற்கு பிரித்து வழங்கப்பட வேண்டுமென இணைத் தலைவர்களால் அரச அதிபருக்கு பணிப்புரையும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இதுவரையில் செயற்படுத்தப்படாத காரணத்தினால், இன்று இம் மக்கள் தங்களுக்கு நியாயம் கேட்டு வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இவ் விடயம் தொடர்பில் அரசு உடனடி அவதானம் செலுத்தி, இந்த விடயத்தில் தடையாக இருப்பவர்களை இனங்கண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குறித்த மக்களை விரைவில் மீள் குடியேற்றவும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.