வவுனியா குருமன்காடு காளி கோவிலில் பெட்டியில் அடைத்து அன்னதானம் : மக்கள் விசனம்!!

974

kali kovil

வவுனியா குருமன்காடு காளிகோவிலில் மண்டபம் பழுதடைந்து விடும் என்பதனால் அன்னதான சோற்றை உணவு பொதி செய்யும் பெட்டிகளில் அடைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டமை இந்துக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காளிகோவிலின் கொடியேற்ற திருவிழா இன்று காலை இடம்பெற்றதன் பின்னர், மகேஸ்வரபூஜை இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படவிருந்த நிலையில் ஆலயத்தில் கட்டப்பட்ட புதிய கலாசார மண்டபம் பழுதடைந்து விடும் என்பதனால் 15 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள உணவு பொதி செய்யும் பெட்டிகளில் அன்னதான சோறு பொதிசெய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்து அன்பர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..

புலம் பெயர் நாடுகளில் கூட இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வாழை இலை கொண்டுவரப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகின்றது.
நமது நாட்டில் பலர் உண்பதற்கு உணவின்றி இருக்கையில் மண்டபம் பழுதடைந்து விடும் என்பதற்காக பெரும் பண செலவில் இவ்வாறு பொதி செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தரிடம் கேட்டபோது, இவ்வாறு அன்னதானம் வழங்கப்படுவதை முதன் முதலாக நான் இன்றுதான் கேள்விப்படுகின்றேன். இது எமது பாரம்பரியத்திற்கு முரணானதாகவே நான் பார்க்கின்றேன். இது தொடர்பில் எனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றவுடன் ஆலயத்தின் தொலைபேசியுடன் தொடர்புகொண்டேன் எனினும் எவருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

இந்து முறைப்படி அன்னத்திற்கு மதிப்பளித்து வாழை இலை அல்லது தாமரை இலைகளில் பக்தர்கள் இருந்து அன்னத்திற்கு மரியாதை செலுத்தி அன்னத்தை உண்பதே மரபு.