யுத்தத்தில் காப்பாற்றப்பட்ட பிள்ளைகள் கயவர்களிடம் காவுகொடுக்கும் நிலை : பெண்கள் அமைப்பு!!

258

ab

மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டணையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் சமன்மலி குணசிங்க தெரிவித்தார்.

யுத்த காலங்களில் கூட தன் பிள்ளைகளை காப்பாற்றி கொண்ட தாய்மார் தற்போது சமூகத்தில் நடமாடும் கயவர்களிடம் தம் பிஞ்சுகளை காவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமய சமூக கேந்திர நிலையத்தில் பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவி வித்தியா விடயத்தில் அரசாங்கம் நீதியை நிலைநாட்ட வேண்டும். வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு நாட்டின் இனிவரும் காலங்களில் இது போன்ற கொடூர சம்பவங்கள் இடம்பெறாமலிருக்க வழிகோலாக அமைய வேண்டும்.

பெண்களுக்கான உரிமைகள் காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றே கூற வேண்டும்.கணத்துக்கு கணம் நாட்டில் பல பாகங்களிலும் இவ்வாறான கொடூர சம்பவங்கள் இடம்பெறுவது வழமையாகியுள்ளது.

பல அப்பாவி பெண்களின் வாழ்க்கை கானலாகிக்கொண்டிருக்கிறது. ஒரு பத்திரிகையில் நாளந்தம் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் குறைந்த பட்ஷம் 6 வரை பதிவாகின்றன.

இந்நிலைமை தொடருமானால் நாட்டு மக்களின் பாதுகாப்பு, சமாதானம், நம்பிக்கை போன்ற விடயங்களில் விரிசல்கள் ஏற்படும். இவை நாட்டின் அபிவிருத்தியிலும் தாக்கம் செலுத்தும்.

வட பகுதியில் யுத்த காலங்களில் கூட தன் பிள்ளைகளை காப்பாற்றி கொண்ட தாய்மார் தற்போது முகமூடி அணிந்து சமூகத்தில் நடமாடும் கயவர்களிடம் தம் பிஞ்சுளை காவு கொடுக்கின்றனர்.

நாட்டு மக்களே நாட்டின் எதிர்காலம். தொடர்ந்தும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாலும் அதிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளாவிடின் நாட்டு மக்களிடையே உள்ள அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைவடையும்.

ஆகையினால் வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய நபர்களுக்கு அதிக பட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும் என்பதை இனமத பேதமின்றி அனைத்துசாராரும் ஒன்றிணைந்து வலியுருத்த வேண்டும் என்றார்.