இன வெறியைத் தூண்டும் 969 இயக்கத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

289

Arrppaattam

பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் இக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின் இடம்பெற்றது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான மக்கள், இளைஞர்கள்,சிறுவர் ,சிறுமிகள் , நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பர்மா பற்றி இலங்கை அரசு வாய் திறக்குமா? ஐநாவே பர்மா பற்றி உன் நிலைப்பாடு என்ன?, ஐநா மன்றமே பௌத்த இன வெறியை தூண்டும் 969 இயக்கத்தை தடை செய், மியன்மார் பௌத்த அரசே முஸ்லிம்களின் மீது கை வைக்காதே அவர்கள் எம் சகோதரர்கள், இலங்கை அரசே மியன்மார் தீவிரவாதி அரசின் விராதுவை எம் நாட்டுக்குள் அனுமதிக்காதே ,விபச்சார ஊடகமே இப்போது சொல் யார் ? பயங்கரவாதி போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு தமிழ்,சிங்கள,ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

மேற்படி பேரணி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இருந்து பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகத்தை சென்றடைந்து பர்மா முஸ்லிம்கள் தொடர்பில் மூன்று கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உப தலைவர் மௌலவி எம்.சீ.எம்.ஸஹ்றான் (மஸ்ஊதி) காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடத்தில் கையளித்தார்.
ஆரப்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.