பேஸ்புக்கில் ஆபாச வைரஸ் : தவிர்ப்பது எப்படி?

442

Virus

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதால் பேஸ்புக்கை பயன்படுத்தவே பலர் அஞ்சி வருகின்றனர்.

தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த ஆபாச வைரஸ் குறித்த விழிப்புணர்வை நெட்டிசன்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வைரஸ் குறித்து ஆக்ரா சைபர் கிரைம் பொலிஸ் அதிகாரி நிதின் கஸானா கூறுகையில் ”இந்த வைரஸ் கிலிம் மல்வேர் பிரிவைச் சேர்ந்தவை. இந்த வகையான வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் உங்களுடன் சேர்த்து 20 பேரை டேக்(Tag) செய்து வருவதால் அனைவரும் எளிதில் ஏமாந்து போகின்றனர். நமது நண்பரும் டேக் செய்யப்பட்டுள்ளார் என அனைவரும் திறந்து பார்க்கின்றனர். எனவே ஒரு நண்பர் பாதிக்கப்பட்டால் அதனை தொடர்ந்து நிறைய நண்பர்கள் பாதிக்கப்படலாம்.” என்றார்.

பேஸ்புக் வாடிக்கையாளர்களே உங்களுக்கு ´watch urgent, because it is your video´,” என்று மெசேஜ் வந்தால் அவதானம். இதனை நீங்கள் கிளிக் செய்தால், உங்களின் இன்போக்சிற்கு ஸ்பாமாக ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வரும், உங்களின் நண்பர்கள் வட்டத்திற்கும் நீங்களே அனுப்பியது போல் இந்த ஆபாச படங்கள், வீடியோக்கள் தானாகவே போய்விடும். இதனால் பலர் தங்களது நண்பர்களை தவறாக நினைத்துக் கொண்டு அவர்களை நட்பு வட்டத்திலிருந்து விலக்கி வருகின்றனர்.

இதே போல் கணிணி பயன்படுத்துபவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிணியில் நீங்கள் அந்த வீடியோவை கிளிக் செய்தால் உங்களை பேஸ்புக் போன்றே வேறு ஒரு இணையதளத்திற்கு (videomasars.healthcare) எடுத்துச் செல்வார்கள். அந்த தளத்தில் ஒரு ஆபாச வீடியோ இருக்கும். அதனை பிளே செய்ய பிளாஷ் பிளேயரை அப்டேட் செய்ய வேண்டும் என்று கேட்கும். நாம் அப்டேட் கொடுத்து விட்டால் நமது கணினிக்குள் வைரஸ் புகுந்து விடும். நமது கணினியின் கட்டுப்பாடு அனைத்தும் ஹேக்கரின் கைக்கு கிடைத்துவிடும்.

கடந்த 2 நாட்களில் இந்த ஆபாச வைரசுக்கு இதுவரை பல லட்சம் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் இரையாகியுள்ளனர். எனவே நெருங்கிய நண்பர்களோடு டேக் செய்யப்பட்டு, எந்த வடிவத்தில் வந்தாலும் அவசரப்பட்டு எந்த லிங்கையும் கிளிக் செய்து விடாதீர்கள்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு சைபர் கிரைம் பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் நிர்வாகம் இதற்கு விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.