வவுனியா வடக்கை மது அற்ற பிரதேசமாக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு!!(படங்கள்)

304

மதுவற்ற வவுனியா வடக்கு விசேட நிகழ்ச்சி திட்டத்தினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் இன்று (17.06.2015) ஆரம்பித்து வைத்தார்.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா வடக்கு பிரதேச செலயகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போதே அவர் இதனை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், இன்றைய வறுமைக்கு மது என்பது முக்கிய காரணியாக காணப்படுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சட்டவிரோத மது பாவனை தடுக்கப்பட்டுள்ள போதிலும் மது பாவனையாளர்கள் கணிசமாக உள்ளனர்.

எமது பிரதேசத்தை வறுமையில் இருந்து மீட்பதற்கு மதுவை ஒழிப்பது முக்கிய சாவலாகவுள்ளது. அதற்கு அரச அதிகாரிகள் மட்டும் செயற்படுவதன் மூலம் அதனை சாதிக்க முடியாது. மக்கள் சக்தி ஒன்றிணைவதன் மூலமாகவே மதுவை நாம் ஒழிக்க முடியும். எனவே மனச்சாட்சியுள்ளவர்களாக மானசீகமாக மக்கள் மதுவை ஒழிக்க ஒன்றுபடவேண்டும்.

அதன் மூலம் வவுனியா வடக்கு பிரதேசத்தில் இருந்து நாம் முதன் முதலாக மது அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம். அதனூடாக ஏனைய பிரதேசங்களும் மதுஅற்ற பிரதேசங்களாகி அழகிய இலங்கைத்தீவு மது அற்ற நாடாக சர்வதேசத்தின் முன் பரிணாமிக்க வேண்டும்.

இன்று மதுவினால் குடும்பங்களின் பாசத்தை பலர் இழக்கின்றனர். பிள்ளைகளின் கல்வியை பல பெற்றோர் தெலைக்கின்றனர் ஆகவே மதுவை விடுத்து மலரும் புது யுகத்தை வவுனியா வடக்கில் இருந்து நாம் உருவாக்க வேண்டும். எவ்வாறு எமது பிரதேச செயலகம் ஏனைய திணக்களங்களுடன் இணைந்து செயற்படுவதில் இலங்கையில் முன்னணியில் திகழ்கின்றதோ அதேபோல் மது அற்ற பிரதேச செயலகமாகவும் இன்னும் சில காலத்தில் மிளிரும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என தெரிவித்தார்.

இதன்போது மது மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் பயன்படுத்தாதோர் மற்றும் பயன்படுத்தி அதில் இருந்து விடுதலை பெற்றோரை ஒன்றிணைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயந்தரூபன் தலைமையில் பிரதேசமட்ட மது ஒழிப்புக்கான குழு நியமிக்கப்பட்டதுடன் கிராம மட்டங்களிலும் மது ஒழிப்புக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற மேற்படி குழுவினர் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவர்கள் முன்னிலையில் மதுவை ஒழிப்பதற்கான சத்தியப்பிரமாணத்தையும் செய்திருந்தனர்.

இந்நிகழ்வுகளில் வவுனியா தொற்றா நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 42 3