கடவுளை கும்பிட்டுவிட்டு கோவிலில் திருடியவன் கைது!!

297


Ind

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை கலியூர் கொலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). பிரபல கொள்ளையன். இவர் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, ஆள் இல்லாத வீடுகளில் கைவரிசை காட்டுவது, ஏ.டி.எம். மையங்களில் பணம் திருடுவது என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்.



மேலும் கோவில்களில் புகுந்து அங்குள்ள உண்டியல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதும் ராஜேஷின் குற்றங்களில் ஒன்று. இவர் கோவில்களில் கொள்ளையடிப்பதற்கு முன்பு அங்குள்ள சாமி சன்னதியில் மனமுருக பிரார்த்தனை செய்வார். மேலும் உண்டியலிலும் காணிக்கை செலுத்திவிட்டு அந்த கோவிலில் கைவரிசை காட்டுவார்.

சமீபத்தில் பிணையில் வெளிவந்த ராஜேஷ் அந்த பகுதியில் உள்ள நீலகேசி அம்மன் கோவிலில் தனது கைவரிசையை காட்டினார். பொலிசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள காமிராவில் பதிவான காட்சிகளை பொலிசார் போட்டு பார்த்த போது அதில் ராஜேஷ் அந்த கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருடும் காட்சி பதிவாகி இருந்தது.



இதை வைத்து ராஜேஷை பொலிசார் தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக ராஜேஷ் வந்திருந்தார். இந்த தகவல் கிடைத்ததும் பொலிசார் அங்கு சென்று ராஜேஷை கைது செய்தனர்.