தீவிரமாக பரவும் மெர்ஸ் நோய் : இதுவரை 31 உயிர்பலி!!

289

Mers

தென் கொரியாவில் மெர்ஸ் நோய் பரவுவது கடந்த சில நாட்களாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் புதிதாக ஒருவர் இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்நோயால் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்திள்ளது. சவுதி அரேபியாவுக்கு அடுத்து இந்நாட்டில்தான் அதிகமானோர் மெர்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நோய்க்கு இதுவரை பலியானவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள சாம்சங் மருத்துவ மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த 26 வயது மருத்துவரை புதிதாக இந்நோய் தாக்கியுள்ளதாகவும், 79 வயதான பெண் ஒருவரும், 80 வயதான பெண் ஒருவரும் இந்நோய்க்கு பலியானதால் பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தாகவும் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 81 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 69 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 13 பேரின் நிலைமை சிக்கலாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்தது.