மனைவியை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்கும் கணவர் : ஓர் பரிதாபச் சம்பவம்!!

268

karunaik-kolai

தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் கை, கால்கள் செயலிழந்த மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதுரை நீதிமன்றத்தில் பட்டுக்கோட்டை வட்டம் பூவாலூரைச் சேர்ந்த பி.மதிவாணன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எனது மனைவி பெயர் சுமதி (33). எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

என்னுடைய மனைவிக்கு கடந்த வருடம் திடீரென கை, கால்கள் செயல் இழந்தன. அவரை சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அங்கு அவரை அழைத்துச் செல்வதற்கு என்னிடம் போதிய வசதியில்லை.

எனவே அரசு செலவில் என் மனைவியை சென்னை ராஜீவ்காந்தி நினைவு மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே, என் மனைவி குணமடையும் வரை அரசு செலவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியடர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.