வவுனியாவில் UNOPS, IFC இணைந்து விழிப்புணர்வு செயற்பாடுகள்!!

570


UN

சர்வதேச சுற்றுப்புறச்சூழல் தினம் 2015ஐ குறிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், UNOPS மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் அங்கத்துவ அமைப்பான IFC ஆகியவற்றினால், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சமூக பங்குபற்றல் செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



இந்த செயற்பாடுகளுக்கு மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி செயற்திட்டத்தினூடாக நிதியுதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இத்திட்டத்துக்கு மொத்த உதவித் தொகையாக 60 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்ளைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்வாங்குவதுடன் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் பங்களிக்கும் வகையில் அமைந்துள்ளது.



பொது மக்கள் மத்தியில் சூழல் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் நிலையான சுற்றுலாத்துறையை பேணுவதற்கு சூழலின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்திருந்தன.



ஏழு பில்லியன் கனவுகள். ஒரு கோள். விழிப்புடன் நுகருங்கள்” எனும் சர்வதேச கருப்பொருளுக்கமையவும் மத்திய சூழல் அதிகார சபையினால் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நிர்ணயிக்கப்பட்டிருந்த முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


UNOPS மற்றும் IFC அதிகாரிகள், மத்திய சூழல் அதிகார சபையுடன் இணைந்து இந்த செயற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டில் பெரும் சவாலாக காணப்படும் திண்மக்கழிவு தொடர்பில் நாடு முழுவதிலும் மத்திய சூழல் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்த தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய இந்த செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

மட்டக்களப்பில், சூழல் பாதுகாப்பு தொடர்பில் தூய்மையாக்கல் செயற்பாடு, மரம் நடுகை, ஓவிய போட்டிகள் போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது பகுதிகளில் காணப்படும் சுவர்களில் ஓவியம் வரைதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


சூழல் பாதுகாப்பு தொடர்பில் இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தமது பாடசாலை சுவர்களுக்கு வர்ணம் தீட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. மட்டக்களப்பு வலய கல்வித் திணைக்களத்தின் பங்காண்மையுடன் இணைந்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பொருட்களை கொண்டு பாடசாலை மாணவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களின் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எளிமையான மற்றும் இனங்காணக்கூடிய கழிவுகளைக் கொண்டு அழகிய மற்றும் பயன்தரக்கூடிய கைவினைப் பொருட்களை தயாரிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. கழிவுகளின் பெறுமதியை உணர்த்தும் வகையில் மாணவர்கள் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர். உதாரணமாக, பிளாஸ்ரிக் போத்தல்களைக் கொண்டு, மழை வீழ்ச்சியை அளவிடக்கூடிய மானி ஒன்றை ஒரு சிறுவர் வடிவமைத்திருந்தார்.

வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளை வவுனியா நகர சபை மற்றும் மத்திய சூழல் அதிகார சபை ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன. ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், புதிய மீன் சந்தை மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய, UC பசார் பகுதியை அண்மித்த பொதுச் சுவர்களில் ஓவியம் வரையும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

மன்னார் பிரதேசத்தில், பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அரசாங்க அதிபரின் அலுவலகத்தின் சுவர்களுக்கு ஓவியம் வரையும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. UNOPS மற்றும் IFC ஆகியன மன்னாரைச் சேர்ந்த மூன்று அனாதை இல்லங்களிலிருந்து சுவரோவியங்களுக்கான அலங்காரங்களை பெற்றிருந்தன.


இந்த அலங்காரங்களை நிபுணத்துவம் வாய்ந்த சிற்பி ஒருவர், சிறுவர்களுடன் இணைந்து சுவரோவியங்களாக படைத்திருந்தார். அரசாங்க அதிபரின் அலுவலகம், RDA, CEA, ACLG, UC மற்றும் பொது மக்கள் ஆகியோருடன் சிறுவர்கள் கலந்துரையாடி சூழல் தொடர்பான தலைப்புகளை பெற்றிருந்தனர்.

இரு மாவட்டங்களிலும், விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சமூக கலந்துரையாடல்கள் போன்றன சுற்றுப்புறச்சூழல் தினத்தில் இடம்பெற்றிருந்தன. இவற்றில் நிலையாண்மை அடிப்படையிலான நுகர்வு, கழிவு முகாமைத்துவம் மற்றும் EU-SDDP நிகழ்ச்சித்திட்டத்தின் இடையீட்டு அம்சங்கள் போன்றன உள்ளடங்கியிருந்தன.

மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் முறையே சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ், சணச அபிவிருத்தி வங்கி மற்றும் பல்மிரா ஹவுஸ் ஆகியன பங்களிப்புகளை வழங்கியிருந்தன. குறிப்பாக பங்குபற்றிய சிறுவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கியிருந்தன.

சூழல் பிரச்சனைகள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த செயற்பாடுகள் அமைந்திருந்தன. குறிப்பாக, நிலையாண்மை அடிப்படையிலான நுகர்வு மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

விழிப்புணர்வூட்டும் செயற்திட்டத்தின் மூலமாக நிலையாண்மையுடன் கூடிய சுற்றுலாத்துறை போன்ற பொருளாதார செயற்பாடுகளுக்கான சூழல் முகாமைத்துவ நடவடிக்கைகளின் முக்கியத்தும் தொடர்பில் சமூகங்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டிருந்தன.

கழிவு முகாமைத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பில் தாம் எவ்வாறு பங்களிப்பை வழங்குவது என்பது தொடர்பில் இந்த பிரதேச பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்குவது இந்த செயற்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது.

EU-SDDP நிகழ்ச்சித்திட்டத்துக்கமைவாக, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சமூக உட்கட்டமைப்பு நிர்மாணம் மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் மற்றும் திறன் மேம்படுத்தல் செயற்பாடுகளை UNOPS மேற்கொண்டு வருகிறது.

IFC இனால் தொழில்முயற்சியாண்மை மற்றும் தற்போதைய வியாபாரங்களின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், வியாபாரச் சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.