வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரின் கீழ் உள்ள நெற்களஞ்சிய சாலையை விடுவிக்குமாறு கோரிக்கை!!

274


Nel

வவுனியா, பூங்கா வீதியில் விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நெற் களஞ்சியசாலையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் லலிதகுமாரி பிரிந்தாஸ்வரன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு அவர் பதில் அளிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெல்லினை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.



கடந்த காலத்தில் குளங்கள் பல புனரமைக்கப்பட்டமையால் இம்முறை விளைச்சலின் அளவு அதிகரித்துள்ளது. 34,657 மெற்றிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டி வரும் என திட்டமிடப்பட்டுள்ளது.



விவசாயி ஒருவரிடம் இருந்து 2 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது.


இதனடிப்படையில் தற்போது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் என்பன இணைந்து நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலைகளை ஒழுங்கமைத்து வருகின்றோம்.

குறிப்பாக வவுனியாவில் ஓமந்தை, வேப்பங்குளம், மாமடு, நெடுங்கேணி ஆகிய பகுதிகளில் களஞ்சியசாலைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5,000 மெற்றிக் தொன் வரையிலான நெல்லினையே தற்போது களஞ்சியப்படுத்த முடியும்.


மிகுதி நெல்லினை களஞ்சியப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. வவுனியா, பூங்கா வீதியில் உள்ள நெற் களஞ்சியசாலை விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

அது விடுவிக்கப்பட்டால் அங்கு 3,000 மெற்றிக் தொன் நெல்லினை களஞ்சியப்படுத்த முடியும். கடந்த பெரும் போக உற்பத்தியின் போது அதனை விடுவிக்குமாறு கடிதம் மூலம் கோரியிருந்தோம்.

ஆனால் பதில் எதுவும் தரப்படவில்லை. தற்போதும் அக் களஞ்சியசாலையையும் அங்குள்ள எமது அலுவலகத்தையும் விடுவிக்குமாறு விசேட அதிரடிப் படையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.