இலங்கை அரசியலில் புதிய திருப்பம் : எதிர்க்கட்சித் தலைவரானார் சம்பந்தன்!!

584

Sambanthan

08 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

01ம் திகதி புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடம் காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடிய போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனை அறிவித்தார்.

அதன்படி இலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுள்ளார்.

இதற்கு முன்னர் அமிர்தலிங்கம் அவர்கள் இலங்கை பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1933ம் ஆண்டு பெப்ரவரி 05ம் திகதி திருகோணமலையில் பிறந்த சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.

2001 ஆம் ஆண்டில் தவிகூ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.