விஷால் வேட்புமனு தாக்கல் : ஆதரவாக திரண்ட திரையுலக நட்சதிரங்கள்!!

272

Sarath

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் திகதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தி.நகர் அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிடம் அருகே உள்ள அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் சரத்குமார் நேற்று காலை தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நடிகர் சங்கத் தேர்தலில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக விஷால் தலைமையிலான அணியினர் இன்று காலை சுமார் 7 மணியளவில் கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். பின்னர் சுமார் 7.30 மணியளவில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று அவரது நினைவிடத்தில் மாலைகள் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

அதன் பின்னரே விஷால் அணியினர் இன்று காலை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். இதையடுத்து தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வேலையில் விஷால் அணியினர் தீவிரமாக ஈடுபட உள்ளனர். இரண்டு அணியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருப்பதால் தற்போது நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன், குஷ்பூ, விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்கள் ஆதரவை விஷால் அணியினருக்கு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்பு மனுக்கள் 4ம் திகதி (ஞாயிறு) காலை பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் 8ம் திகதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும்.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.