வவுனியாவிற்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்!!(படங்கள்)

377


ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் போராறு வாவியிலிருந்து ரிஸோவயல் ஒன்றை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் முதன் முதலாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர்வழங்கல் திட்டமொன்றை மாத்திரம் பிரத்தியேகமாக அமுல்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (03.10.2015) வவுனியா பிரதேசத்திற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகளுடன் சென்று நிலைமையைப் பார்வையிட்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.



அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்ததாவது..

தற்போழுது தேசிய நீர் வழங்கல் சபையூடாக 45 சதவீதமான மக்களுக்கு குடிநீர் வழங்கலை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இது 2020ஆம் ஆண்டுக்குள் 60 சத வீதமாக அதிகரிக்க பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.



வடக்கு, வடமத்திய மாகாணத்திலும் இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில் இரசாயன பதார்த்தங்களின் கலப்பினால் சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் மேற்கொள்வதாகவும் இச்செயற்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.



நீரில் கலந்துள்ள இரசாயன பாதார்த்தங்களை வேறாக்கி நீரை சுத்தீகரிப்பதற்கு உதவும் ஆர் என சுருக்கமாக குறிப்பிடப்படும் இயந்திரத்தையும் இவ்வாறான பொறிமுறையை சிறுநீரக நோய் அதிகம் காணப்படும் ஏனைய சில மாகாணங்களுக்கும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாம் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.


புளோரைட் அதிகமுள்ள தண்ணீரின் கனதியை குறைப்பதனூடாகவும் தண்ணீரில் செறிந்துள்ள கல்சியத்தின் அளவை குறைப்பதனூடாகவும் சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்ற வகையில் தூய நீரை வழங்குவது சாத்தியமாகும். தண்ணீரில் கலந்துள்ள கனிப்பொருள்களின் செறிவு சிறுநீரகத்தோடும், கல்லீரலோடும் தொடர்பான நோய்களுக்கு வழிகோலுகின்றன.

குழாய் நீர் கிணறுகளின் உபயோகம், மழை நீரை தேக்கி வைத்து வறட்சி நிலவும் காலங்களில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பன பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.


வட மாகாணத்தைப் பொருத்தவரை முழு குடிநீர் வழங்கள் திட்டங்களையும் முழு நாட்டினது நீர் தேவைப்பாடுகளையும் 45 சதவீதம்தான் நாங்கள் இதுவரை பூர்த்திசெய்துள்ளோம். 2020 ஆம் ஆண்டளவில் இதை இன்னும் 15 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான பாரிய நீர் வழங்கள் திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றோம்.

வவுனியா மாவட்டத்தை நோக்கும்போது இப்போது 4 சதவீத நீர் வழங்கல் ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம். இதை 2020ஆம் ஆண்டுக்குள் 40 வீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளேம். ஒப்பீட்டு ரீதியாக பார்க்கும்போது முழு நாட்டிலும் உள்ள நீர் வழங்கல் சேவை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு 2020 வரை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே முழு நாட்டுடன் ஒப்பிடும் போது வட மாகாணத்துக்கும் வவுனியா மாவட்டத்துக்கும் நீர் வழங்கல் திட்டங்கள் தேசிய சராசரியை விடவும் கூடுதலான கரிசனையை இந்த வரவுசெலவுத் திட்டம் முடிந்த பின்னர் செலுத்த உள்ளோம்.

அதே போல் மல்வத்து ஓயா நீர் வழங்கல் திட்டத்தையும் திட்டமிட்டிருக்கின்றோம். 240 000 சனத்தொகையைக் கொண்ட மாவட்டத்தில் அதனுடைய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யக்கூடியதாக சுத்தமான குடிநீர் 29 000 மீட்டர் கியூப் வரையிலான கொள்ளலவு தேவைப்படுகின்றது.


இதே போல இன்னும் குறிப்பிட்ட பிரதேசங்களை மையப்படுத்தி சிறிய நீர் வழங்கல் திட்டங்களை அமுல்ப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றியும் கலந்துரைடியுள்ளோம்.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய தலைமையில் சிறுநீரக நோயினால் பதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு அதற்கென்று பிரத்தியேகமான சுத்திகரிப்பு நீர் வழங்கல் திட்டங்களை வழங்கயும் நாங்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

அதனடிப்படையில் சுத்திகரிப்பு இயந்திரங்களை பல இடங்களில் பொருத்த உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். நாங்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் இதுபோன்ற செயற்திட்டங்களை பிரத்தியேகமாக ஆரம்பித்து வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்

இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப்பாவா பாருக், அமைச்சின் மேலதிகச் செயலாளர் முயுனுதீன், திணைக்களத்தின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண சபை உறுப்பினர்
ஜெயதிலக, பிரதேச செயலாளர் கா.உதயராஜா, நகர சபை செயலாளர் கா. சத்தியசீலன், அரச
ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1H6A2338 DSC_0073 DSC_0087 DSC_0140 DSC_0140_1