2016 வரவுசெலவுத்திட்டம் வசதி படைத்தவர்களுக்கே வரப்பிரசாதம் : பா .உ சிவசக்தி ஆனந்தன்!!

340

Ananthan

தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரவுசெலவுத்திட்டமானது திருப்திகரமானதாக, ஆரோக்கியம் பயப்பதாக அமையவில்லை. பல குறைபாடுகளை கொண்ட வரவுசெலவுத்திட்டமாக உள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு ஒரு மயக்கநிலையை 2016 வரவுசெலவுத்திட்டம் கொடுத்தாலும், உண்மையாக, அறிவுபூர்வமாக நோக்கின் வசதிவாய்ப்பு படைத்தவர்களுக்கு பெரியளவில் அநுகூலங்களை கொடுக்கும் ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே உள்ளது என்றும்,

போரின் அழிவுகளை நேரடியாக சந்தித்துள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களை விசேட தேவைக்குட்பட்ட மாகாணங்களாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை அறிவிக்கவில்லை என்றும், மிகவும் முக்கியமாக இந்த வரவுசெலவுத்திட்டமானது போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதமான நிவாரணங்களையும் அளிப்பதாக இல்லை. போரில் இடம்பெற்ற சொத்தழிவுகள், உயிரிழப்புகள். அங்கவீன இழப்புகளுக்கு நியாயமாக இழப்பீட்டுத்தொகையை வழங்குமாறு ஒவ்வொரு வரவுசெலவுத்திட்டத்தின் போதும் வலியுறுத்தியே வந்திருக்கிறோம். முன்னைய அரசாங்கம் போலவே புதிய அரசாங்கமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களை, கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்பதாகத்தெரியவில்லை என்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரையின் முழுவிவரம்:

காலம்சென்ற முன்னாள் நிதி அமைச்சர் கௌரவ ரொனி டிமெல்லிற்குப் பின்னர் மிக நீண்ட வரவு-செலவு திட்ட உரை நிகழ்த்திய நிதியமைச்சர் அவர்களுக்கு அத்தகைய சக்தி தொடர்ந்தும் கிடைக்க வாழ்த்துகிறேன். இத்தகையதொரு வரவு-செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்ததில் தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பதை சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த வரவு-செலவுத்திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், குழந்தைகளுக்கான பால்மா உள்ளிட்ட பதினொரு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட, பல்வேறுபட்ட புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த புதிய வரிகளில் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி நான்கு வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான இறக்குமதி வரியும் முன்னரை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரி அதிகரிப்புகள் பொருட்களின் விலைகளை நிச்சயமாக அதிகரிக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்த நாட்டில் காணப்படும் உள்நாட்டு வளங்களின் உயரிய நுகர்வுக்கு அப்பால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் மீது அதீத நம்பிக்கை கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் பட்சத்தில் தான் நிதியமைச்சர் குறிப்பிட்டு உள்ளவாறான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியும். தற்போதைய நிலையில் ஏறத்தாழ 740 பில்லியன் ரூபாய் துண்டுவிழும் தொகையாக இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் காலப்பகுதியில் நாம் அதிகளவான வெளிநாட்டு கடன்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படப்போகின்றோம்.
இதனால் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கடன் சுமை அதிகளவில் ஏற்படப்போகின்றது. அந்தவகையில் முந்தைய அரசும் பல பில்லியன் ரூபாய்கள் கடனை விட்டுச்சென்றுள்ளது. ஆகவே இந்த வரவுசெலவுத்திட்டமும் மேலும் பல பில்லியன் ரூபாய்களுக்கு இந்த நாட்டு மக்களை கடனாளிகளாக மாற்றியுள்ளதென்றே கொள்ளவேண்டியிருக்கின்றது.

எனவே வரவு செலவுத்திட்டத்தில் திட்டமிட்டுள்ளதன் பிரகாரம் வெளிநாட்டு முதலீடுகள் உள்நாட்டுக்குள்ளே வெகுவாக வரவேண்டுமாகவிருந்தால், முதலில் அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது.
அரசியல் ஸ்திரத்தன்மை என்ற விடயத்திற்கும் கடந்த கால ஆட்சியாளர்களுக்குமிடையில் பாரிய இடைவெளியொன்றே காணப்பட்டது. அவர்கள் அவ்வாறான ஸ்த்திரத்தன்மையொன்றை ஏற்படுத்துவதற்கு ஒரு தசாப்த ஆட்சிக்காலத்தில் எவ்விதமான முயற்சிகளையும் இதய சுத்தியுடன் ஏடுக்கவில்லை என்பது மிக முக்கிமானதாகின்றது.

கடந்த கால ஆட்சி என்பது உலக நாடுகளுடன் முரண்பட்ட ஒரு போக்கினை கடைப்பிடித்ததுடன், தமிழ் மக்களை அனுசரித்துப்போகாத மனோநிலையையும் கொண்டிருந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற அடையாளத்தை முற்றாக அழிப்பதற்கான செயற்பாடுகளையும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நிருவகிப்பதற்கான அகபுறச் சூழலை வலுவாக்கும் வகையிலுமே நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது எவ்வாறான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தப்போகின்றது? என்பது எதிர்பார்ப்புக்கள் நிரம்பிய மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. சர்வதேச சமூகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் பல்வேறுபட்ட கருத்துகளையும், வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கினாலும் கூட,

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதிலும், போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலான உரிய பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையையும் பார்க்கையில் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்குள் ஒருமித்த கருத்து இருப்பதை காணமுடியவில்லை.

இதனை அவர்கள் அன்றாடம் பகிரங்கமாக வெளியிடும் கருத்துக்கள் மூலம் உணரந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட கோணங்களில் முன்னுக்குப்பின் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆறு தசாப்தகால பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அரசாங்கத்தரப்பினரின் இவ்வாறான வேறுபட்ட கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் நாட்டுக்குள் புதிய புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இதனால் பிரச்சினைகள் நீறுபூத்த நெருப்பாகவே தொடருவதற்கான ஏதுநிலைமைகளே காணப்படுகின்றன.

அண்மைய நாட்களில் ‘நயினாதீவு’ என்ற பாரம்பரியமிக்க தமிழ் பெயரை ‘நாகதீப’ என்று சிங்கள பெயராக மாற்ற முயற்சிக்கின்றார்கள். இது இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவிக்கும் செயற்பாடாகும். தமிழ் மக்களின் மனங்களில் மென்மேலும் வெறுப்புகளை உருவாக்கும் ஒரு செயலாகும்.

அங்கு ஒரு பௌத்த ஆலயம் தோற்றுவிக்க பட்டிருந்தாலும் கூட, அதனை அவமதிக்காமல் அதற்குரிய மரியாதையை தமிழ் மக்கள் கொடுத்தே வந்திருக்கின்றார்கள். ஆனால் பல நூற்றாண்டுகள் தொன்மைமிக்க, இந்துக்களின் பூர்வீகத்துடன் தொடர்புடைய ஆலயம் அமையப்பெற்றுள்ள இடத்தின் பெயரை மாற்றுவதென்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.

ஆகவே இந்த அரசாங்கமும் வரலாற்று ரீதியான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களின் பெயர்களை சிங்கள பௌத்த கிராமங்களாக அல்லது பிரதேசங்களாக மாற்றுகின்ற செயலில் ஈடுபடுகின்றது.

அசாதாரண சூழலில் தமது சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்து பரிதவித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேறவேண்டும் என்பதையே கோரி நிற்கின்றார்கள். அவர்களை துரிதகதியில் மீளக்குடியேறுவதற்கான எத்தகைய அரசியல் தீர்மானங்களையும் இதுவரையில் அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக கடந்த அரசாங்கம் விட்டுச்சென்ற புதிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை புதிய அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

நீங்களும், வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற மறுக்கின்றீர்கள். வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை கொடுக்க மறுக்கின்றீர்கள். தமிழ் மக்களை ஒரு அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்தும் அடக்கிவைக்க விரும்புகின்றீர்கள். ஆனால் தேசிய அரசாங்கம் என்றும், நல்லாட்சி அரசாங்கம் என்றும் பெருமையாக உதட்டளவில் கூறிக்கொள்கின்றீர்கள்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூறல், சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளாக நியமித்தல் இப்படி இன்னோரன்ன அத்தியாவசிய பிரிச்சினைகளில் இந்த அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான எவ்வித சமிக்ஞைகளைக்கூட தமிழ் மக்களால் இந்தநொடி வரையிலும் உணர முடியவில்லை.

முன்னைய அரசாங்கம் விடுவிப்பதாக அமைச்சரவையில் தீர்மானம் எடுத்து அடையாளப்படுத்தியிருந்த மிகச்சொற்ப அளவு காணிகளையே விடுவித்துள்ளதாக நீங்களும் கூறுகின்றீர்கள். அப்படியென்றால் இதன் அர்த்தம் என்ன? தமிழ் மக்களுக்கு உரித்துடைய வேறு காணிகளை உங்களுடைய அரசாங்கம் புதிதாக விடுவிக்காது என்று தானே அர்த்தம்.

மிகவும் முக்கியமாக இந்த வரவுசெலவுத்திட்டமானது போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதமான நிவாரணங்களையும் அளிப்பதாக இல்லை. போரில் இடம்பெற்ற சொத்தழிவுகள், உயிரிழப்புகள். அங்கவீன இழப்புகளுக்கு நியாயமாக இழப்பீட்டுத்தொகையை வழங்குமாறு ஒவ்வொரு வரவுசெலவுத்திட்டத்தின்போதும் நாம் வலியுறுத்தியே வந்திருக்கிறோம்.
முன்னைய அரசாங்கம் போலவே உங்கள் அரசாங்கமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களை, கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்பதாகத்தெரியவில்லை.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. அவர்கள் வறுமைக்கு மத்தியில் தங்களது குடும்பச் சுமையையும் சுமந்து செல்ல வேண்டியவர்களாக உள்ளனர்.

அவர்களுக்கான வாழ்வாதாரம், வீட்டுத்திட்டம், சுயதொழில் முயற்சிக்கான வட்டியற்ற இலகு தவணை அடிப்படையிலான கடன் வசதிகள், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி, பராமரிப்பு, சுகாதார வசதிகளை ஏற்படுத்தக் கொடுத்தல் போன்ற விடயங்களில் எவ்விதமான முக்கியத்துவமும், உத்தரவாதங்களும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் கொடுக்கப்படவில்லை.
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்தியுள்ளோம் என்று கூறினாலும், அவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நேர்மையான விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பதை உண்மையாக வெளிப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நியதிகளுக்குட்பட்டு நட்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அதேபோல போரின் அழிவுகளை நேரடியாக சந்தித்துள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களை விசேட தேவைக்குட்பட்ட மாகாணங்களாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை அறிவிக்கவில்லை.
போரினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட படையினருக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் கடந்த அரசாங்கத்தினாலும் தற்போதைய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவு திட்டத்திலும் வழங்கப்பட்டிருந்தன. அதே போரில் அதே பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கும் எதுவித சலுகைகளும் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கத்திலும் செய்யப்படவில்லை.

வடக்கு-கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அந்தந்த மாகாணசபைகளே முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில், மாகாண சபைகளுக்குப் போதுமான நிதியொதுக்கப்படவில்லை. அதிகாரங்கள் பகிரப்படவில்லை.
அங்கவீனமாக்கப்பட்டவர்கள், விசேடதேவைக்குட்பட்டோர் ஆகியோரின் குடும்பங்களுக்கும் இராணுவத்தினருக்கு இணையான வசதிகளும் கொடுப்பனவுகளும் வழங்கப்படவேண்டும்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்ய முடியாமல் பல ஆண்டுகாலம் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைப் போக்குகின்ற வகையில் உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
நல்லாட்சிக்கு அடையாளமாகவும் நல்லிணக்கத்திற்கான குறியீடாகவும் அனைத்து அரசியல் கைதிகளும் அரசியல் ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஏற்றவகையில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத,

விவசாய உற்பத்தியை பாதிக்காத உற்பத்திசார் தொழிற்சாலைகளை உருவாக்கி அவர்களுக்கு நிரந்தர தொழில்வாய்ப்பையும் வாழ்வில் பிடிப்பையும் நம்பிக்கையையும், வாழ்க்கைக்கு உத்தரவாதத்தையும் அளிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் இந்த உயர்ந்த சபையில் நாங்கள் சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம். இந்த உரிமை இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கிறது. சர்வதேச சமூகமும் கடந்த காலங்களில் இதனை வலியுறுத்தியுள்ளது. ஆகவே, இராணுவமும் காவல்துறையும் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க முயலக்கூடாது.

இரகசிய முகாம் குறித்து இந்த நல்லாட்சிக்கான உயரிய சபையில் எமது கட்சியின் தலைவரும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் க.பிரேமச்சந்திரன் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் அன்று கடற்படைத் தளபதி அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இப்போது ஐ.நா. குழுவினரின் மூலம் எமது சந்தேகம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலும், அரசாங்கத்தரப்பினரோ ஐ.நா குழுவினர் எவ்வாறு அங்கு சென்றனர்? என வினாக்களை எழுப்புகின்றனரே தவிர, அம்முகாம்கள் தொடர்பாக விரிவான பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துவதற்கும், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பாகவும் விசாரிக்க தயார் என்ற அறிவிப்பை பகிரங்கமாகச் சொல்ல துணியவில்லை.
கடந்த காலத்தில் இவ்வாறான இரகசிய முகாம்கள் இருந்தன என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆகவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், கடற்படைத்தளபதி, மற்றும் பாதுகாப்புத்துறைசார் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட சிலருக்கு தெரியாது இவ்விடயம் நிச்சயமாக முன்னெடுக்கப்பட்டிருக்காது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நல்லாட்சியை நிலைநாட்ட ஆட்சிப்பீடமேறியிருக்கும் இந்த அரசாங்கம் அது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? யார் யார் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்? என்பதை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தவேண்டும்.

அவ்வாறான நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்த்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை, பாதுகாப்பு அதிகாரிகளை தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள் யுத்த வெற்றி புருசர்கள் எனச் சித்தரித்துக் கொண்டிருப்பதானது இனங்களுக்கிடையில் ஐயப்பாடுகள் வலுத்து நெருக்கடி நிலைமைகள் ஏற்படுவதற்கான சூழமைவுகளையே தோற்றுவிக்கும்.

வன இலாகாவின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை

புதிய அரசாங்கத்தின் கீழும் வன இலாகா திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஆகியவை பகிரங்கமாகவே பொதுமக்களின் உறுதி மற்றும் போமிற் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. அதற்கு அப்பால் பறவைகள் சரணாலயம், வனவிலங்குகள் பாதுகாப்பு பிரதேசம் போன்ற காரணங்களை முன்வைத்தும் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகிறது.
இதில் வன இலாகா திணைக்களம் ஏதேச்சதிகாரத்துடன் மிகமோசமாகச் செயற்படுகிறது.

30 முதல் 40 இற்கும் அதிகமான வருடங்களாக மக்கள் அனுபவித்து வரும் காணிகளில் எல்லைக்கல்லை நாட்டி தனது அதிகாரத்திற்குள் கேட்டுகேள்வி இன்றி கொண்டு வருகிறது. மக்கள் அனுபவித்து வருகின்ற காணிகள் வன இலாகாவின் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக இருந்தாலும் அதனை விடுவித்து மக்களிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

வன்னி மாவட்டத்தில் உள்ள பலகோடி ரூபாய் பெறுமதியான பாலை, முதிரை, தேக்கு மரங்களை சட்டவிரோதமாக அரிந்துகொண்டு செல்வதற்கான அனுமதியை இலஞ்சம் வாங்கிக்கொண்டு வன இலாகா வழங்குகிறது. இதேபோல கருங்கல், ஆற்று மணல், கிரவல் போன்ற கனியவளங்களையும் இராணுவமும் அரச உயர்மட்ட செல்வாக்கு உள்ளவர்களும் வியாபார நோக்கத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காவல்துறையினரும் துணைபோயுள்ளனர்.

இதனால் சாதாரண மக்கள் வீட்டுத்திட்டம் போன்ற தமது அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த வளங்களை பெற முடியாத இடர் நிலைமை காணப்படுகின்றது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போர் ஓய்வுக்குப் பின்னரான காலப்பகுதியில் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது.

வீதிகள் பிரச்சினை

உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைக்குட்பட்ட பாதைகள் நீண்டகாலமாக திருத்தப்படாமல் இருப்பதால் இந்த பாதைகளில் போக்குவரத்தை மேற்கொள்வதில் பாரிய சிரமம் நிலவுகிறது.

ஆகவே, அனைத்து வீதி உட்கட்டமைப்பு வசதிகளையும் துரிதமாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பதற்குப் போதிய நிதியொதுக்கீடு அவசியமாகும்.

மின்சார வசதிகள்

வன்னி மாவட்டத்தில் கிராமங்களுக்கான மின்சார வசதிகள் நீண்டகாலமாகப் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இதனால் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்தும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைபடுகின்றன. விவசாயிகளும் மின்சார தேவையை நீண்ட காலமாக பெறமுடியாத நிலையிலுள்ளனர். முன்பிருந்த இலவச மின்சாரத்திட்டத்தை மீண்டும் வழங்குவதற்கும், புதிய இணைப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வீட்டுத்திட்டம் மற்றும் மீள்குடியேற்றம்

மீள்குடியேற்றம் என்பது போர் முடிவடைந்து ஆறரை வருடங்களை கடந்தும், வன்னி மாவட்டத்தில் முழுமைப்படுத்தப்படவில்லை.

வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 803 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 415 வீடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 253 வீடுகளும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் தேவைப்படுகின்றன. மொத்தமாக வன்னி மாவட்டத்தில் மட்டும் இன்னும் 39 ஆயிரத்து 471 வீடுகள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படுவதாக மாவட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தில் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் மற்றும் இருவரைக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படாது என்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கை கடைப்பிடிக்கப்பட்டது. எனவே இந்த நடவடிக்கையை கைவிட்டு புதிய அரசாங்கம் போரால் பாதிக்கப்பட்டு சொத்தழிவுகளை சந்தித்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்க ஆவண செய்ய வேண்டும்.

மீள்குடியேற்ற அமைச்சர் அவர்கள், பயனாளிகளை தெரிவு செய்யும் போது மக்கள் பிரதிநிதிகளையும், அரச அதிகாரிகளையும், சிவில் சமுக அமைப்புகளையும் உள்ளடக்கி சரியான முறையில் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் பயனாளிகள் தெரிவில் பல்வேறுபட்ட குளறுபடிகளும், அரசியல் தலையீடுகளும் காணப்பட்டமையினால், உண்மையாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைக்காமல் போன அவல நிலை காணப்படுகின்றது. இந்த தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வேண்டும்.
வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்குமாறு தொடர்ச்சியாக கோரியவாறே இருக்கின்றோம். ஆனால் தற்போது வரையில் ஒரு இராணுவ வீரரைக் கூட குறைக்கமாட்டோமென்றே கூறிவருகின்றீர்கள்.

வடக்கில் துப்பாக்கி, குண்டுச் சத்தங்கள் இன்றிய நிலைமைகள் இருந்தாலும் பொதுமக்களுக்கு இந்த நாட்டில் காணப்படும் அடிப்படைச் சுதந்திரத்தின் அடிப்படையில் நிம்மதியாக நடமாடும் நிலைமைகள் காணப்படவில்லை.

இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்

குறிப்பாக தற்போதும் கடந்த காலத்தில் விடுதலைப்போராட்டத்துடன் தொடர்புபட்ட குடும்ப அங்கத்தவர்கள் மீதான பார்வை வேறுபட்டதாகவே இருக்கின்றது. தற்போது நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசதேசத்திற்கு வாக்குறுதியை வழங்கியுள்ள நிலையில் ஏன் தமிழ் மக்கள் இவ்வாறு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றார்கள்?

வடக்கு மக்கள் தமது உரிமைகளை, தேவைகளை, நியாயங்களை கோரி வெகுஜன பேராட்டங்களை அகிம்சை முறையில் முன்னெடுக்கின்ற சந்தர்ப்பங்களிலும், பொது விழாக்களில் ஒன்றுகூடுகின்றபோதும் ஊடகவியலாளர்களுக்கு அதிகமாக அங்கு புலனாய்வாளர்களின் பிரசன்னம் காணப்படுகின்றது.

அங்கு சமுகமளிக்கும் புலனாய்வாளர்கள் அனைவரும் தமிழ் பேசும் சமுகங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நவீன தொலைபேசி, புகைப்பட, காணொளி கருவிகளை பயன்படுத்தி அனைவரையும் அனுமதியின்றி படம்பிடித்துச் செல்கின்ற நிலமைகள் உச்சமான அளவில் காணப்படுகின்றன.
இத்தகைய புலனாய்வாளர்களை இயக்குவது யார்? இவர்கள் தமது சமுகங்களுக்கு எதிராக செயற்படுவதற்கான மூளைச்சலவையை செய்தது யார்? இவ்வாறு மக்களை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களின் குரல்களை நசுக்கும் வகையிலும் செயற்படும் புலனாய்வாளர்கள் தேசிய பாதுகாப்புக்காக செயற்பாடுகின்றார்கள் என அர்த்தம் கற்பிக்க போகின்றீர்களா?

இவ்வாறு புலனாய்வாளர்கள் பிரசன்னம் செய்வது மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் யுவதிகளை மூளைச்சலவை செய்தோ அல்லது அழுத்தங்களை பிரயோகித்தோ இவ்வாறான செயற்பாடுகளுக்குள் வலிந்து உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் விடுதலைப்போராட்டத்தில் தம்மை இணைத்து தற்போது புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் இணைந்து வாழும் மனநிலைக்கு திரும்பியுள்ள இளைஞர் யுவதிகளும் அச்சத்துடன் வெளியில் நடமுடியாத நிலைமையில் இருப்பதுடன் இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு எவரும் முன்வராதவொரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் தமது எதிர்காலத்தை தொலைத்தவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமைகள் தொடருமாகவிருந்தால் அவர்களுக்கு சமுகத்தின் மீது விரக்தியுறும் சூழலே உருவாகும். அவ்வாறான நிலைமை ஏற்படுமாகவிருந்தால் தென்னிலங்கை தரப்புக்களே முழுமையாக பொறுப்புக்களையும் ஏற்கவேண்டும் என்பதை இச்சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அரசியல் கைதிகள் விவகாரம்

தமிழ் அரசியல் கைதிகளை பிணை அடிப்படையில் விடுத்திருந்தீர்கள். 62 பேரை விடுவிப்பதாக கூறப்பட்டிருந்தாலும் வெறுமனே 39 பேரை மட்டுமே விடுவித்துள்ளீர்கள். அவர்களில் 6 பேர் அரசியல் கைதிகள் அல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். ஏனையோரை விடுதலை செய்வது குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. புனர்வாழ்வு தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைளால் சிக்கல் தன்மையையே ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டவர்கள் என்பதை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு நிபந்தனையற்ற வகையில் விடுதலை அளிப்பதே நல்லெணத்தை விரும்பும் அரசாங்கத்தின் சமிக்ஞையாக இருக்க முடியும்.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கோரிக்கைகளை முன்வைக்கும் போது, இனவாதிகளுக்கு பயந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான கௌரவ இரா.சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதற்கான உரிய பதிலை வழங்வேண்டுமென இச்சபையிடம் கேட்டுக்கொள்கின்றேன். தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடானது எமக்கு பாரிய ஐயப்பாடுகளை அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது. வாக்குறுதிகள் மீறப்பட்ட நிலையில் இவ்வாறான ஐயப்பாடுகள் ஏற்படுவதென்பது யதார்த்தமானது.

தென்னிலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தரப்பினர் இவ்விடயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி விடுவார்கள் என எமக்கு காரணம் கற்பிக்க முயல்கின்றீர்கள். தமிழ் மக்களுக்கு காணப்படும் பல்வேறு பிரச்சினைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினை முக்கியமானதொன்றாகும்.

அதற்கான தீர்வையளிப்பதற்கே இவ்வாறான தயக்கத்தை காண்பிக்கின்றீர்கள் என்றால், அதிகாரப்பரவலாக்கலுடனான அரசியல் தீர்வொன்றைப் பெறுவது குறித்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றீர்கள்? அவற்றை எவ்வாறு தென்னிலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் புரிந்துணர்வை ஏற்படுத்தப்போகின்றார்கள்.
தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த வரவுசெலவுத்திட்டமானது திருப்திகரமானதாக, ஆரோக்கியம் பயப்பதாக அமையவில்லை. பல குறைபாடுகளை கொண்ட வரவுசெலவுத்திட்டமாக இது உள்ளது.

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு ஒரு மயக்கநிலையை இந்த வரவுசெலவுத்திட்டம் கொடுத்தாலும்,
உண்மையாக அறிவுபூர்வமாக நோக்கின் வசதி வாய்ப்பு படைத்தவர்களுக்கு பெரியளவில் அநுகூலங்களை கொடுக்கும் ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே இது உள்ளது. வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுக்குள் கொண்டு வருகின்றோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு வரவு செலவுத்திட்டமாகவும் இது பார்க்கப்பட வேண்டியுள்ளது.

ஆனால் உண்மை என்னவெனில், வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவருவதாக இருந்தால், முதலில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுதல் வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டுமாகவிருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், இனப்பிரச்சினைக்கு தீர்வும் காணப்பட வேண்டும்.

இவை சாத்தியமாக்கப்படுதல் வேண்டும் என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறைகளையும், பரிந்துரைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் நியாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
உள்நாட்டு விசாரணையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளனர். ஏனெனில் கடந்த ஆணைக்குழுக்கள் உண்மையற்ற, வெளிப்படைத்தன்மையற்ற விடையங்களாகவே இருந்திருக்கின்றன.
எனவே தற்போதைய ஜெனிவா பேரவையின் பரிந்துரைகளின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படும் விசாரணை குழுக்களில் அதிகளவான வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும் என்று தமிழ் மக்களும், நாங்களும் விரும்புகின்றோம். அப்போதுதான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

ஆகவே அவ்விதமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் பொறிமுறைகள் அமைய வேண்டும் என்பது எங்களது பெருத்த எதிர்பார்ப்பாகும்.

எங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் வகையில் விசாரணைகளும், அதன் பொறிமுறைகளும் அமையாத பட்சத்தில், அரசியல் ஸ்திரத்தன்மையானது ஏற்படாது. ஸ்திரத்தன்மை ஏற்படாத பட்சத்தில் நாட்டுக்குள் வெளிநாட்டு முதலீடுகளை உட்கொண்டு வருவதும் சாத்தியமாகாமல் போகும் நிலைமைகள் ஏற்படலாம். அவ்வாறான நிலையில் எவ்வாறு நாட்டை முன்னோக்கிய பாதையில் கொண்டு செல்ல முடியும்.

அரசியலும் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்தெடுக்க முடியாத விடயதானங்கள். இவற்றில் ஏதாவது ஒருவிடயத்தை மட்டும் இலக்கு வைத்து மற்றையதை எட்டி உதைத்து உலக அரங்கில் தலைநிமிர்ந்து கைவீசி நடப்போமெனக் சிந்திப்பது கானல் நீர்போன்றது. தற்போதைய நிலையில் மேலைத்தேய நாடுகளின் பங்களிப்புடன் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் வளச்சி மிக்கதொரு பொருளாதரத்தை நாட்;டில் ஸ்தாபிப்பதையுமே அரசாங்கம் இலக்காக கொண்டிருகின்றது. ஆனால் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையேல் அந்த இலக்கு நோக்கிய பயணம் சாத்தியமாகுவதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமாக ஏற்படப்போவதில்லை.