வடமாகாணத்தில் மீள்குடியேற்றக்கொள்கை விரைவில் வகுக்கப்படவுள்ளது : அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

260

வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட செயலணியொன்றை உருவாக்குவதுடன் அதற்கான கொள்கை வகுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதம செயலாளரின் செயலகத்தில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது..

இதுவரை மத்திய அரசானது நேரடியாகவே வடமாகாணத்தின் மீள்குடியேற்ற விடயங்களை கையாண்டுவந்தது. தற்போது மாகாண புனர்வாழ்வு அமைச்சு ஒன்று இயங்கிவருகின்றது. இதுதொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தோம்.

இனிவருங்காலங்களில் வடக்கு மாகாணத்திற்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மாகாண மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் பங்குபற்றுதலுடனேயே நடைபெறும்.

இதற்காக முதலில் மாகாணத்திற்கான மீள்குடியேற்ற கொள்கையொன்று வகுப்பது அவசியமாகும். இவ்வாறான கொள்கையொன்று வகுக்கப்படாமையே மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் குளறுபடிகள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமாகும்.

பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட செயலணிகள் உருவாக்கப்படவுள்ளன. இதில் அரசாங்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர். மீள்குடியேற்றம் தொடர்பில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்படுவது அவசியமாகும் எனத் தெரிவித்தார்.

வடமாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் மாகாண அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செலாளர்கள் கலந்துகொண்ட முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

IMG_1096 IMG_1098 IMG_1101 IMG_1102 IMG_1103 IMG_1104