வாக்களித்த மக்களின் நம்பிக்கையை வீணடிக்காது பொறுப்புக்களை நிறைவேற்றுவேன் : அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

265

வடமாகாண சுகாதார அமைச்சரின் மாகாண நிதியொதுக்கீட்டில் பொது அமைப்புகளுக்கு நிதி, உபகரணங்கள், தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பின்வருமாறு தெரிவித்தார்..

வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது வழங்கப்பட்ட பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்ற அயராது தொடர்ந்தும் உழைப்பேன். நான் பரம்பரை அரசியல்வாதியுமல்ல, பரம்பரையாக அரசியல் செய்யவேண்டிய தேவையும் எனக்கில்லை. காலத்தின் தேவைகருதி அரசியலுக்குள் அழைத்துவரப்பட்டவன்.

மக்கள் என்மீது வைத்த நம்பிக்கை வீண்போகாது பணிசெய்வதுடன் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை செவ்வனே செய்ய தொடர்ந்தும் பாடுபடுவேன்.

போரிற்கு பின்னரான சூழ்நிலையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் மூலம் அமைக்கப்பட்ட மாகாண சபையில் முக்கியமான துறையான சுகாதார அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டேன்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தம்மூலம் வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைக்கான ஆரம்பத் தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாண சபைமுறைமையானது வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கடந்த 28 வருடங்களாக செவ்வனே இயங்கி வருகின்றது. எனினும் எமக்காக உருவாக்கப்ட்ட இந்த முறைமை 2013ற்கு பின்னரேதான் வடக்கில் இயங்க ஆரம்பித்துள்ளது.

மாகாண சபையின் அனைத்து விடயங்களையும் ஆரம்பப் புள்ளியிலிருந்தே ஆரம்பிக்கவேண்டியுள்ளது. இதனால் மாகாண அமைச்சர் என்ற வகையில் அமைச்சு தொடர்பான வேலைப்பழு அதிகமாகும். இதனால் பொதுமக்களை அடிக்கடி சந்திப்பதில் சிலகுறைகள் இருப்பதை நான் அறிவேன்.

எனினும் எனது பதவிக்காலத்தில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே செய்ய நான்பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் புதுக்குளம் மாகாவித்தியாலயத்திற்கு டுப்புளோ இயந்திரம், புதுக்குளம் சித்தி விநாயகர் இயல்இசைக் கலாமன்றத்திற்கான இசைக்கருவிகள், சமய நிறுவனங்களுக்கான காசோலைகள், வறுமைக்கோட்டிற்குபட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒலிபெருக்கி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

IMG_1250 IMG_1251 IMG_1267 IMG_1269 IMG_1272 IMG_1274 IMG_1279