14 வயது மாணவியை தாயாக்கிய வழக்கு : எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!!

585

Ilancheliyan

பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் நட்டயீடு செலுத்துமாறும் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார்.

அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய வயோதிபதாக இருந்தார்.

இதில் 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியைக் கடத்தியமை, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டமை என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் கந்தையா சித்திவிநாயகம் என்ற வயோதிபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வழக்குத் தொடுனர் தரப்பில் பெண் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி சாட்சிகளை நெறிப்படுத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

சம்பவம் நடைபெற்ற தினம் தனக்கு 14 வயது என்றும் வடமராட்சி பாடசாலையொன்றில் படித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது..

சம்பவம் நடைபெற்ற தினமாகிய கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி மாலை நாலு நாலரை மணிபோல் பூக்கள் பறிப்பதற்காக பற்றைகள் சூழ்ந்த ஒற்றையடி பாதையில் சென்று கொண்டிருந்த போது, எதிரியான கந்தையா சித்திவிநாயகம் பாதையில் நின்றிருந்தார்.

அவர் எனக்கு குடிப்பதற்கு ஜுஸ் தந்தார். அதை வாங்கிக் குடித்தேன். சில நிமிடங்களில் எனக்கு மயக்கம் வந்தது தெரிந்தது. அப்போது எதிரி எனது கையைப் பிடித்ததை உணர்ந்தேன். அதற்குப் பின்னர் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. உணர்வற்று நான் மயங்கிவிட்டேன்.

பின்னர் ஐந்து ஐந்தரை மணிபோல் நான் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, எனது உடலில் இரத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கண்டேன்.

நான் அணிந்திருந்த ஆடைகள் குலைந்திருந்தன. எனது உள்ளாடையைக் காணவில்லை. சட்டை மற்றும் பாவாடையின் பொத்தான்கள் கழற்றப்பட்டிருந்தன.

கால்கள் விரிந்து ஆடைகள் விலகி அரை நிர்வாணமாக இருந்ததை உணர்ந்தேன். எனது பெண் உடலில் இரத்தம் வடிந்திருந்தது. அப்போது எதிரியை அங்கு காணவில்லை.

எதிரியான சித்திவிநாயகத்தைத் தேடி அவருடைய வீட்டிற்குச் சென்றேன். அங்கு ஒருவரும் இருக்கவில்லை. அங்கிருந்து திரும்பி வந்தபோது வழியில் எதிரி சித்திவிநாயகத்தை வழியில் கண்டேன்.

நீங்கள் தானே எனக்கு ஜுஸ் தந்தீர்கள் எனக்கு என்ன நடந்தது? என்னை என்ன செய்தீர்கள்? எனக் கேட்டேன்.

அதற்கு அவர் முதலில் நான் என்ன செய்தனானோ? என கேட்டுவிட்டு, பின்னர் எனது கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, “அம்மா ஆக்களுக்குச் சொன்னால் குடும்பத்தில் ஒருவரையும் உயிருடன் பார்க்கமாட்டாய். அக்காவிற்கும் இப்படித்தான் செய்வேன்” என கூறினார்.

சிறிது காலத்தின் பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் எனக்கு பெண்குழந்தை பிறந்தது என கூறினார்.

இந்த வழக்கு டிஎன்ஏ இரத்த பரிசோதனை அறிக்கையுடன் முக்கியமாகத் தங்கியுள்ள வழக்கு என்ற காரணத்தினால், அந்தப் பரிசோதனைகளை நடத்திய ஜீன் டெக நிறுவன சிரேஸ்ட விஞ்ஞானி குடாலியனகே நந்திக்க சிறியந்த பெரேரா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி டிஎன்ஏ அறிக்கையை சமர்ப்பித்து, சாட்சியமளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாகிய ஹம்சிக்காவின் விஞ்ஞான ரீதியான தாய் பாதிக்கப்பட்ட பெண் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

விஞ்ஞான ரீதியான தந்தை எதிரியான கந்தை சித்திவிநாயகம் எனவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது டிஎன்ஏ ஆய்வின் மூலம் 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எதிரியாகிய சித்திவிநாயகமே தந்தையாவார் என தனது சாட்சியத்தில் உறுதிப்படுத்தினார்.

வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தான் உடலுறவு கொண்டதை ஏற்றுக்கொண்டு எதிரியாகிய கந்தையா சித்திவிநாயகம் கூண்டில் ஏறி சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது:

இந்தப் பெண் தன்னுடைய விருப்பத்துடன்தான் என்னுடன் வந்து பழகினார். தனக்கு மண்ணீரல் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் 18 வயதில் தான் இறந்துவிடுவேன் எனக்கூறி அவர் என்னுடன் நெருங்கிப் பழகினார்.

எனது மனைவி கோவிலுக்குச் செல்லும் வேளைகளில் என்னைக் கவரக் கூடிய விதத்தில் ஆடைகள் அணிந்து வந்து என்னைத் தூண்டியதன் விளைவாகவே நான் அவருடன் உடலுறவு கொண்டேன் என்றார்.

விசாரணiயின் முடிவில் எதிரியைக் குற்றவாளியென மன்று கண்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன் தனது தண்டனைத் தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:

பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாணவி – ஒரு சிறுமியாக இருந்தபோது, பாலியல் வல்லுறவின் மூலம் எதிரி அவரை தாயாக்கியுள்ளார்.

இதனால் அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பதினான்கு வயது மாணவியைத் தாயாக்கிய கொடூரமான குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே பொருத்தமாகும்.

இருப்பினும் குற்றம் புரிந்த போது எதிரிக்கு 62 வயது. இப்போது அவருக்கு 69 வயது. பாதிக்கப்பட்டப் பெண் எதிரிக்கு ஒரு பேத்தி மாதிரியானவர்.

அத்தகைய சிறுவயதுடைய பெண்ணுக்கு, பலாத்காரமாக – மோசடியான முறையில் ஜுசுக்குள் போதை மருந்திட்டு, அதனை குடிக்கக் கொடுத்து, அவரை எதிரி மயக்கியுள்ளார்.

அவ்வாறான மயக்க நிலையில் அந்த சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு அவருககுக் குழந்தை பிறப்பதற்குக் காரணமாக இருந்த எதிரிக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சமுதாயத்தில் பாலியல் குற்றம் அதிகமாக நடக்கும்போது, நீதிமன்றங்கள் கருணை அடிப்படையில் தண்டனை வழங்குவது குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்து விடும். அத்துடன், பாலியல் வல்லுறவு குற்றச் செயல்கள் புரிபவர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்புக்கள் தண்டனைகளில் அச்சமில்லாத நிலை காணப்படுவதற்கும் ஏதுவாகிவிடுகின்றது.

இந்த வழக்கில் 14 வயதில் 62 வயதுடைய வயோதிபரினால், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகிய கொடூரமான அவலச் செயலுக்கு, பாதிக்கப்பட்ட பெண் ஆளாகியிருக்கின்றார்.

அந்தப் பெண்ணின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுவிட்டது. 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகள் மீது விசேடமாக மாணவிகள் மீது பாலியல் வல்லுறவு குற்றம் புரிவது பாரதூரமாக அளவுக்கதிகமாக சமுதாயத்தை மிரட்டும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால், சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக இந்தச சம்பவங்கள் அமைந்துவிடுகின்றன.

இந்த நிலையில், நீதிமன்றங்கள் பெண்களினதும், சிறுவர் சிறுமிகளினதும் அதியுச்ச சட்டத்தின் மேலான பாதுகாவலராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த வழக்கில் வழங்கப்படுகின்ற தீர்ப்பானது, இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

எதிரி தரப்பு சட்டத்தரணியின் கருணை விண்ணப்பத்தையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுக்கத் தவறவில்லை.

தீர்ப்புக்கு முதலில் திகதியிட்டபோது நஞ்சருந்தி தற்கொலை முயற்சி செய்த எதிரி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதான வைத்தியசாலையில் கடந்த 15 நாட்களாக் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இரண்டாவது முறையாக தீர்ப்பு வழங்குவதற்கான திகதியாக இன்றைய தினம் நிர்ணயிக்கப்பட்டபோதும், எதிரிக்கு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிரியின் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியமளித்த யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எதிரி இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் சில மணி நேரங்களில்கூட அவருக்கு மரணம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே எதிரி தரப்பு சட்டத்தரணி எதிரி மரண படுக்கையில் இருக்கின்ற நிலையையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கருணை விண்ணப்பம் செய்துள்ளார். இதனையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.

இந்த வழக்கின் எதிரி 69 வயதில் நஞ்சருந்தியதன் காரணமாக வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். 14 வயதில் மாணவியாக இருந்து போது மானம் பறிபோன நிலையில் பாதிக்கப்பட்ட பெண், குழந்தையுடன் நீதிகோரி நீதிமன்றில் நிற்கின்றார்.

இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள எதிரிக்கு அதியுச்ச தண்டனையாக 20 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

ஆயினும் எதிரியின் நிலைமை, பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை என்பவற்றை மன்று மிகவும் கவனமாக ஆய்வு செய்து, பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்தமைக்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்குகின்றது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பாதிப்பின் காரணமாக பிறந்துள்ள குழந்தைக்கும் நட்டயீடாக எதிரி 20 லட்சம் ரூபா செலுத்த வேண்டும்.

இந்த நட்டயீட்டைக் கட்டத் தவறினால் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும்.

அதேநேரம் சில மணித்தியாலங்களில் கூட, மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலையில் எதிரி வைத்தியசாலையில் இருப்பதாக வைத்தியசாலையன் பதில் பணிப்பாளர் அளித்த சாட்சியத் தகவலை மன்று மீண்டும் பரிசீலனை செய்து ஆட்கடத்தல் குற்றத் தண்டனையாகிய 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிரி ஏக காலத்தில் அனுபவிப்பதற்கு மன்று அனுமதி அளிக்கின்றது என தெரிவித்தார்.

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த எதிரி நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கான முயற்சியின் பின்னர் வைத்தியசாiயில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பெண் 9 வருடங்ளின் பின்னர் தனக்கு நீதி வேண்டும் என கோரி குழந்தையுடன் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கின்றார்.

இதேபோன்று மறுபுறத்தில் குற்றம் சுமத்தப்பட்ட எதிரி தன்னை மாய்த்துக் கொள்வதற்காக நஞ்சு அருந்தியிருந்தாலும், அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என நஞ்சுடனும், அவருடைய வயோதிபத்துடனும் வைத்தியசாலையில் மருத்துவர்களின் போராட்டம்.

சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவரைத் தாயாக்கிய பாரதூரமான குற்றம் புரிந்தவருக்கு அவருடைய வயோதிபத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்ட்ட பெண்ணின் மானத்திற்கான போராட்டத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்ற நிலையில் நீதி வழங்குவதற்காக நீதிமன்றத்தில் போராட்டம்.

இத்தகைய நிலைமையிலேயே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-