மரண தண்டனைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு தற்காலிக தடை..!

404

deathமரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என பாகிஸ்தான் அரசு இன்று தற்காலிக தடை விதித்தது.

தீவிரவாத தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த தண்டனையை தீர்ப்பு வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர்தான் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் உத்தரவிட்டதால், தண்டனை பெற்ற கைதிகள் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நவாஸ் ஷரீப், பாகிஸ்தானில் பெருகிவரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் விதமாக, மரண தண்டனையை நிறைவேற்ற நீதிபதிகள் வழங்கிய சலுகை காலத்தை கடந்த ஜூன் மாதம் ரத்து செய்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் தீவிரவாத செயல்களில் தற்போது ஈடுபடுபவர்களை பயமுறுத்தி, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவர் கருதினார்.

நவாஸ் ஷரீப்பின் இந்த உத்தரவுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை பொருட்படுத்தாத நவாஸ் ஷரீப் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 2மரண தண்டனை கைதிகளை வரும் 21 அல்லது 22ம் திகதி தூக்கிலிட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தற்போது வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் பாகிஸ்தான் திரும்பியதும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர் தண்டனைகளை நிறைவேற்றலாம்.

அதுவரை மரண தண்டனையை நிறைவேற்ற காலநிர்ணய மற்ற தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் அரசு இன்று அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான மம்நூன் உசேன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த (செப்டம்பர்) மாதம் 8ம் திகதி தற்போதைய ஜனாதிபதி சர்தாரி பதவி விலகுகிறார். அதுவரை இந்த தற்காலிக தடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.