வவுனியாவில் ஒருதாய் மக்களையும் பிரிக்க முயலும் ஆதிக்கப்போட்டி!!

727

VV

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறும் தாண்டிக்குளத்தில் அமைக்குமாறும் ஒரே நேரத்தில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வவுனியா மாவட்டத்தில் அமையுமா அமையாதா என இன்னமும் தீர்மானிக்கப்படாத ஆனால், சிறு விவசாயி முதல் பெரு வியாபாரி வரை பெரு இலாபம் கிட்டும் எனப்பேராசை கொண்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

அரசியல்வாதிகளின் ஆதிக்கப்போட்டியில் அரை நிதியாண்டு கடந்தபின்னும் ஆரம்பிக்கப்படாத இந்தத்திட்டம் பெரும்பாலும் திரும்பிப்போகும் வாய்ப்புத்தான் மிக அதிகம்.

இப்படியிருக்க வவுனியா மக்களையே பிரித்தாளும் தந்திரத்தை அரசியல் தலைவர்கள் இப்போது கையாள்கிறார்கள். ஒரே நேரத்தில் சில பொது அமைப்புக்கள் தாண்டிக்குளத்திற்குத் திட்டம் வேண்டும் என்றும், சில பொது அமைப்புக்கள் ஓமந்தைக்குத் திட்டம் வேண்டும் என்றும் உண்ணாவிரதப்போராட்டம் நிகழ்த்துகின்றன.

அதே வேளையில் ஓமந்தையில் திட்டத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடக்கின்றது.

ஏற்கனவே இந்தத்திட்டம் வவுனியாவிற்கு வருவதை விரும்பாத சில இனவாத சிங்களத் தலைவர்களுக்கும், வவுனியாவின் அபிவிருத்தியை விரும்பாத சில பிரதேசவாதத் தமிழ்த் தலைவர்களுக்கும் இந்தப்போராட்டங்கள் வாயில் அவல் போட்டுள்ளன.

தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் மக்களது அபிவிருத்தி பாதிக்கப்பட்டால் கூடப்பரவாயில்லை என்று நினைக்கும் சில தலைவர்கள் இனி வவுனியா மக்களுக்கடையில் கலவரம் ஏற்படாது தடுக்க இந்தத்திட்டம் வேறு மாவட்டத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது என்று அறிவிக்கவும் முன்வரலாம்.

எனவே எங்கள் பிரதேசத்தில் அக்கறை கொண்ட மக்கள் அனைவரும் அவதானமாக இருக்கவேண்டிய பொழுது இது.

கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஒரு பயனுள்ள திட்டம் எங்களை நாடி வந்துள்ளது. எங்களுக்கிடையான வீண் போட்டியால் அதனைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம்.

சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களின் வழிநடத்துதலில் இருந்து வெளியே வந்து வவுனியா மாவட்டப் பொது அமைப்புக்கள் அனைத்தும் உடனே சந்திக்கவேண்டும்.

தமக்குப்பொருத்தமான இடம் எது என்பதை பிரதேசப்பற்றைக் கடந்து துறைசார் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யவேண்டும். முடிவுசெய்த பின் அனைவரும் இணைந்து தொடர்போராட்டங்களை நிகழ்த்தவேண்டும். இந்தத் திட்டம் இந்த இடத்தில் உடனே ஆரம்பிக்கப்படவேண்டுமென்று.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

செ.மதுரகன்-