பாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!!

1100


rape

நாட்டில் பாலியல் ரீதியான வதைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை தினசரி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.



உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் என்பன தற்காலத்தில் அதிகரித்த வண்ணமுள்ளன.

பாலியல் இம்சைகள் பாரதூரமான குற்றம் எனத் தெரிந்திருந்தும், அதிலிருந்து அதிகமானவர்கள் விடுபட முடியாதவர்களாக உள்ளனர்.



இவ்வாறான சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டும் வருகின்றனர்.



மனிதன் உலகில் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக அன்று முதல் இன்றுவரை சான்றோர் தங்களின் சொல், செயல், எழுத்துத் திறமைகளைக் கொண்டு முயன்று வருகின்றனர்.


ஆனால், இதனை முறையாகப் பயன்படுத்தத் தவறும் மனிதன் தனக்குரிய உயர் நிலையிலிருந்து கீழே தள்ளப்படுகின்றான்.

சில சமயங்களில் தனக்குரிய உயர் பண்புகளிலிருந்தும் முற்றாக விடுபட்டு, பகுத்தறிவற்ற பிராணியாக மாறி விடுகின்றான்.


தற்காலத்தில் இடம்பெற்று வரும் பாலியல் குற்றங்கள் அருவருக்கத்தக்கவையாக உள்ளன. உள்ளம் நம்ப மறுக்கின்றது. இவர்களும் மனிதர்களா? என எண்ணத் தோன்றுகின்றது.

பாலியல் குற்றச் செயல்களுக்கு உடலியல் தேவை, சந்தர்ப்ப சூழ்நிலை, போதைவஸ்துப் பாவனை, பெற்றோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லுதல், பிள்ளைகள் பெற்றோரை இழந்து அநாதைகளாக இருத்தல், போதிய பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பாலியல் குற்றச் செயல்களுக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை என்பதே தற்காலத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணமாகக் குறிப்பிடலாம்.

பிள்ளைகளை தவறான, பொருத்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல், தூண்டுதல் என்பன துஷ்பிரயோகமாகும்.

18 வயதுக்குக் குறைந்த ஆண், பெண் இருபாலாரினதும் அறியாமையைப் பயன்படுத்தி, உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தச் செய்வது, அல்லது தவறாக வழிநடாத்துவது என்பன சிறுவர் துஷ்பிரயோகமாகும்.இளவயதினர்-, பெரியவர்கள், ஆண்கள், – பெண்கள், ஏழை – பணக்காரன், படித்தவன் – பாமரன் என்ற வேறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பினரும் பாலியல் ரீதியான சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


பாலியல் இம்சைகளில் ஈடுபடுபவர்கள் பாடசாலை மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை.நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்ந்துள்ள பாலியல் இம்சைகள் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளன.

அது மாத்திரமன்றி, பிள்ளைகளின் பாதுகாப்புக்காக பொறுப்பாக்கப்பட்டவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதிபர், ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பாலியல் வதைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்த வண்ணமுள்ளன.

அதிபர், ஆசிரியர்களுடன் நெருக்கமாகப் பழகும் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்.சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயம் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

எல்லாப் பிள்ளைகளுக்கும் உள்ள உரிமைகளை அது வரையறுத்துள்ளது. ‘ஒவ்வொரு பிள்ளையும் விபசாரம் மற்றும் ஆபாசக் காட்சிகள் ஆகியன அடங்கலான பாலியல் சுரண்டல்கள், இம்சைகள் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமையுடையவர்களாவர்’ என சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் உறுப்புரை- 34 குறிப்பிடுகின்றது.

உலகின் அநேகமான நாடுகள் இதன் அடிப்படையிேலயே பிள்ளைகள் வழிநடத்தப்படுவர் என ஏற்றுக் கொண்டுள்ளன.

பாலியல் ரீதியான இம்சைகள், குற்றங்களை சட்டம் பார்த்துக் கொள்ளும் என நாங்கள் ஒருபோதும் ஒதுங்கி விட முடியாது. சமூகத்தவர்கள் இவ்விடயங்களில் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும்.

பாலியல் ரீதியான இம்சைகள், வதைகளை சமூகத்திலிருந்து முற்றாக ஒழித்துக் கட்டுவதுடன், மேம்பட்ட சமூகத்திற்காகவும் நாங்கள் பாடுபட வேண்டும்.

நாட்டில் அண்மைக் காலங்களில் இடம்பெற்று வரும் பாலியல் இம்சைகளில் அதிகமானவை பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்டவையாகவும், அதில் அதிகம் அதிபர்கள், ஆசிரியர்கள்; சம்பந்தப்படுவதாகவும் அமைந்துள்ளன.

இளவயது பாடசாலை மாணவியர் மீது பாலியல் ரீதியான வதைகளை மேற்கொள்வது பாரதூரமான குற்றமாகும். அதிலும் குறிப்பாக, மாணவியர் மீது ஆசிரியர்கள் புரியும் பாலியல் இம்சைகள் மேலும் மோசமான குற்றமாகும்.

பாடசாலை மாணவிகள் மீது பாலியல் குற்றமிழைக்கும் ஆசிரியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிப்பதற்கு தண்டனை சட்டக் கோவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்தில் கடமையிலுள்ள ஆசிரியர்களின் அதிகாரபூர்வமான கட்டுப்பாட்டிலிருக்கும் பதினாறு வயதிற்குக் குறைந்த மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது பாரதூரமான குற்றமாகும்.

இவ்வாறு குற்றமிழைக்கும் ஆசிரியர்களுக்கு தண்டனை சட்டக் கோவையின் விதிகளுக்கமைவாக 07 முதல் 15 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத் தண்டனை விதிப்பதற்கும் சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.

பதின்ம வயதுச் சிறுமிகள் அல்லது மாணவியர் மீதான பாலியல் வதைக்குற்ற வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் வழக்குகளாக உள்ளன.

பாலியல் குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்படும் ஆசிரியர்கள் நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவியர் மீது, பாலியல் குற்றம் புரியும் ஆசிரியர்களைக் காப்பாற்றும் முயற்சிகளும் குற்றச் செயலாகவே கருதப்படுகின்றன.

சாட்சிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட கட்டளைச் சட்டமானது பாலியல் குற்றம் புரிந்தவர்களைக் காப்பாற்றும் நோக்குடன், செயற்படுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களை தண்டிக்கப்படக் கூடிய குற்றம் புரிந்தவர்களாகவே கருதுகின்றது.

குற்றச் செயல் ஒன்று இடம்பெற்றுள்ளது என்ற தகவல் அல்லது முறைப்பாடு கிடைத்ததும், அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்காமல் அலுவலக ரீதியில் விசாரணை நடத்துகின்ற அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் சட்டரீதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாலியல் வதை குற்றச் செயல்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளினாேலயே சமரசமாக தீர்த்து வைக்க முடியாத குற்றச் செயல்கள் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

இவ்வாறான நிலையில் பாடசாலை வளாகத்தில் மாணவியர் மீது, பாலியல் வதை புரியும் ஆசிரியர்களை சட்டத்தின் முன் நிறுத்தாது, பாதுகாப்பதும் குற்றமாகும்.

சிறைத்தண்டனைக்குரிய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று தெரிந்து கொண்டும் பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்காது அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பனவற்றின் நிர்வாகிகள் ஆகியோர் ஒன்றிணைந்து சமாதானம், சமரசமாக தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டால் குற்றச் செயல்களுக்கு உதவி, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பாடசாலை மாணவியர் மு.ப. 07.00 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை அதிபர், ஆசிரியர்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பாடசாலையின் பாதுகாவலில் இருந்து வருகின்றனர்.

இக்காலப்பகுதியில் பாலியல் வதைக் குற்றம் ஆசிரியரினால் புரியப்பட்டால், பாதிக்கப்பட்ட மாணவி எந்த அதிபர் அல்லது ஆசிரியரிடம் முறையீடு செய்கின்றாரோ அவர், அம்மாணவியின் பெற்றோருக்கு உடனடியாக அறிவித்து, பெற்றோருடன் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தல் வேண்டும்.

இது சட்டத்தின் முதல் தேவைப்பாடாகும்.மாணவர் பாலியல் வதைக் குற்றம் தொடர்பில், கல்வித் திணைக்கள உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள், பாதிக்கப்பட்ட மாணவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

இச்செயற்பாட்டின் பின்னரே, குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை பற்றி அறிவிக்க வேண்டும். இவை உயரதிகாரிகளின் பொறுப்பும், கடமையுமாகும்.

சட்டரீதியான நீதிமன்ற விசாரணைகள், பொலிஸ் விசாரணைகளைத் தவிர்த்து, ஓழுக்காற்று விசாரணை நடாத்துகின்ற அனைத்து அதிகாரிகள் மீதும், பாலியல்வதை குற்றச் சம்பவத்தை அல்லது குற்றச் செயலை பொலிசாருக்கு அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாடசாலை மாணவியர் மீதான பாலியல் வதை குற்றச் செயல்கள் இரண்டு வகையான விசாரணைகளைக் கொண்டுள்ளன. பொலிஸ், நீதிமன்ற விசாரணையின் மூலம் குற்றம் புரிந்த ஆசிரியர் சிறையில் அடைக்கப்படுவது ஒருவிதம்.

மற்றையது, திணைக்களத்தின் நிர்வாக ஒழுக்காற்று விசாரணையின் மூலம் பணியிலிருந்து இடைநிறுத்துவது. ஒழுக்காற்று விசாரணை என்ற பெயரில், குற்றச் செயலில் ஈடுபட்ட ஆசிரியரை வேறு பாடசாலைக்கு இடமாற்றி, பாலியல் வதை குற்றச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் கல்வித் துறை அதிகாரிகள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் தெளிவு பெற வேண்டும்.

பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி மறைக்கப்படும் பாலியல் வதைக் குற்றங்கள், குற்றமிழைத்தவர்கள் மீண்டும், மீண்டும் அக்குற்றத்தை இழைப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.

அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேச பாடசாலையொன்றில் மாணவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சு துணிகரமான இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. குற்றமிழைப்பவர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான தண்டனைகள், நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.

தற்காலத்தில் பாடசாலை ஆசிரியர்கள் பாலியல் வதைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில ஆசிரியர்கள் ஒன்று இரண்டல்ல பல பாலியல் குற்றச் செயல்களை மேற்கொண்டவர்களாக உள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தற்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பென்பது பெற்றோருக்கு பெரும் கஷ்டம், சுமையாக மாறியுள்ளது. வெளியில் மாத்திரமன்றி வீட்டிலும் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளின் பாதுகாப்பு விடயத்தில் அசிரத்தையாக யாரும் இருந்து விட முடியாது என்ற செய்தியை கடந்த கால அனுபவங்கள் எங்களுக்கு மிகத் தெளிவாக கற்றுத் தந்துள்ளன.

ஆகையால், பெற்றோர் அவதானனம் செலுத்துவது இன்றியமையாததாகும்.பிள்ளைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரத்த உறவினர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், ரியூஷன் நிலைய நிர்வாகிகள், பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டிகள் ஆகியோர் தொடர்பிலும் பிள்ளைகளைத் தெளிபடுத்த வேண்டும்.

பெற்றோரை இழந்த அநாதைப் பிள்ளைகளுக்கு அன்பு, ஆதரவு காட்டுவதாகக் கூறிக் கொண்டு, உறவினர்களும், நண்பர்களும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவங்களும் நமது நாட்டில் அதிகம் பதிவாகியுள்ளன.