நீதி கிடைக்காததால் உயிரை மாய்த்த யுவதி – வவுனியா மாங்குளத்தில் சம்பவம்..!

518


suicideதிருமணம் செய்வதற்காக வெளிநாட்டுக்கு செல்ல இருந்த இளம் யுவதி ஒருவர் நஞ்சருந்தி உயிரிழந்தார். மாங்குளம், நீதிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா துளசி (22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

“எனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் பக்கச் சார்பாக நடந்துள்ளனர். இங்கு நீதி நியாயம் இல்லை. நான் உயிரிழந்தாலும் பரவயில்லை, எனக்கு ஏற்பட்ட நிலை வேறு பெண்களுக்கு ஏற்படக் கூடாது. எனது உயிரிழப்பிற்கு பொலிஸார்தான் காரணம்.” என்று நஞ்சருந்திய யுவதி உயிரிழக்க முன்னர் கூறியதாக அவரின் சிறிய தாயார் இறப்பு விசாரணையில் சாட்சியம் அளித்துள்ளார்.



சம்பவம் தொடர்பில் யுவதியின் சிறிய தாயார் அளித்த சாட்சியம் வருமாறு:

“குறித்த யுவதி பெற்றோரை இழந்த நிலையில் பேர்த்தியாருடன் வாழ்ந்து வந்தார். அவர் திருமணம் செய்வதற்காக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லவிருந்தார்.



இந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி பேர்த்தியார் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார். அப்போது அதே இடத்தைச் சேர்ந்த சதீஸ் என்பவர் 9 பேருடன் அன்றைய தினம் யுவதியின் வீட்டுக்குச் சென்று யுவதியைக் கடத்திச் செல்ல முற்பட்டார். ஆனால் அங்கு யுவதியின் சிறிய தந்தையார் இருந்ததனால் கடத்தல் திட்டம் கைகூடவில்லை. எனவே அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களால் பேசி யுவதியை அவமானப் படுத்திவிட்டு சென்றுவிட்டார்.



அது தொடர்பில் யுவதியும் சிறிய தாயாரும் மாங்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். சதீஸ் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. அதனாலோ என்னவோ பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.


எனவே தனக்கு நீதி கிடைக்காத காரணத்தினால் குறித்த யுவதி மனமுடைந்த நிலையில் நஞ்சருந்தியுள்ளார். நஞ்சருந்திய யுவதி உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காது யுவதி உயிரிழந்தார்.” என்று தெரிவித்தார்.

திடீர் மரணவிசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரணவிசாரணை மேற்கொண்டார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இச்சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் சிலரை பொலிஸார் தேடிவருவதாகவும் தெரியவருகிறது.