தாதியின் உயிரைக் காப்பாற்றிய பாகுபலி!!

301

தயாரிப்பு, இயக்கம், கலை, விறுவிறுப்பு, வசூல் என்று சகல அம்சங்களிலும் உச்சம் தொட்ட பாகுபலி, மற்றுமொரு வித்தியாசமான சாதனையைப் படைத்துள்ளது. அதாவது, ஒரு தாதியின் உயிரையே இந்தப் படம் காப்பாற்றியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் வினயா குமாரி (43) என்ற தாதி. இவருக்கு மூளையில் கட்டி வளர்ந்திருந்ததால் அடிக்கடி வலிப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகினார். இவருக்கு, ஒரு சத்திர சிகிச்சை செய்து காப்பாற்ற மருத்துவர் குழுவொன்று முடிவுசெய்தது.

பிரச்சினை என்னவென்றால், சிகிச்சை முடியும்வரை நோயாளி விழித்திருக்க வேண்டும் என்பதே!

அவரை எப்படி விழித்திருக்க வைக்கலாம் என்று யோசித்த தலைமை மருத்துவருக்கு சட்டென்று பாகுபலி நினைவுக்கு வந்திருக்கிறது.

உடனே வினயாவை சிகிச்சைக்குத் தயார் செய்த அவர், சிகிச்சையின்போது மடிக்கணினி ஒன்றில் பாகுபலி 2ஆம் பாகத்தை ஒளிபரப்புச் செய்தார்.

ஒருபுறம், நோயாளி பாகுபலியில் லயித்திருக்க, மறுபுறம் மருத்துவர் குழு சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

உண்மையில் பாகுபலி படத்துக்கு நன்றி கூற வேண்டும். சிகிச்சை முடியும் வரை நோயாளி விழித்திருந்ததுடன், படத்தின் பாடல்களையும் மெல்லிய குரலில் பாடிக்கொண்டே இருந்தார். இது முற்றிலும் புதுமையான அனுபவத்தை எமக்குத் தந்தது என்று, தலைமை மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

இச்சம்பவத்தையடுத்து, குறித்த சிகிச்சைக்கு ‘பாகுபலி பிரெய்ன் சேர்ஜரி’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கியுள்ளனர் மருத்துவர்கள்.