சவுதி அரேபியாவில் நான் அனுபவித்த கொடுமைகள் : இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி!!

837

 
சவுதி அரேபியாவில் முதலாளியால் அடித்து துன்புறுத்தப்பட்ட இந்திய பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீனா, ஏஜெண்டுகள் மூலமாக மலேசியாவுக்கு செல்ல விண்ணப்பித்திருந்த நிலையில் இவரை ஏமாற்றி சவுதி அரேபியாவின் ரியாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு Dawadmi என்னும் நகரில் உள்ள ஷேக் ஒருவரின் வீட்டினுள் ரீனா அடைத்து வைக்கப்பட்டுள்ளார், உண்ண உணவின்றி, தினமும் அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

இவ்வாறான கடும் சித்ரவதைகளுக்கு உள்ளான ரீனா, ஒருமுறை அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அந்த பொலிசார் மீண்டும் அவரை ஷேக்கின் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் Bhagwant Maan -க்கு வீடியோ பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ரீனா கூறுகையில், ’நான் சவுதி அரேபியாவில், ஷேக் ஒருவரின் வீட்டில் ஓர் ஆண்டாக கொடூரமான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறேன். என்னை ஓர் அறையில் பூட்டி வைத்து, அடித்து துன்புறுத்துகின்றனர், உணவும் சரியாக கொடுப்பதில்லை, என்னால் இங்கு இருக்க முடியவில்லை. எனக்கு கணவரும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இவர்கள் மிகவும் மோசமானவர்கள், தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள், இல்லையேல் நான் இங்கு இறந்து விடுவேன் அல்லது அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள். பல பெண்களை நீங்கள் இது போன்ற சூழ்நிலைகளில் காப்பாற்றியுள்ளீர்கள், என்னையும் உங்கள் மகள் போல நினைத்து காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மேலும் இந்தியாவில் இருக்கும் எந்த சகோதர, சகோதரிகளும் சவுதி அரேபியாவிற்கு வர வேண்டாம் எனவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரீனா பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இதே போன்ற இன்னொரு பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.