வவுனியா நீதிமன்றத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு!!

449

 
வவுனியா நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் மிக நீண்டகாலமாக நிலவிவந்த இரு பிரச்சினைகளுக்கு இன்று (13.12.2017) தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் குழந்தைகளுடன் நீதிமன்றத்திற்குவரும் தாய்மாரின் அசௌகரியங்களை போக்கும் வகையில், நீதிமன்ற வளாகத்தில் ‘மழலைகள் மகிழ்வகம்’ திறந்து வைக்கப்பட்டதுடன், வாகனத்தரிப்பிடம் அமைப்பதற்காக கால்கோளிடும் நிகழ்வும் இடம்பெற்றது.

‘யுனிசெப்’ அமைப்பினால் சர்வதேச சிறுவர் தினம் – 2017 எனும் செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தளபாடங்களைக் கொண்டு, நீதி அமைச்சின் அனுசரணையுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் வழிகாட்டலின் கீழ் ‘மழலைகள் மகிழ்வகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார், வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதி தஸ்னீம் பௌஷான், வலயக் கணக்காளர் ஜீவா சுகந்தன், முன்னாள் வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளர் ஜனாப் அபூபக்கர் ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலம், சிரேஷ்ட சட்டத்தரணி கங்காதரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதேவேளை மிக நீண்டகாலமாகக் காணப்பட்ட சட்டத்தரணிகளுக்கான வாகனத் தரிப்பிட இடவசதியின்மையை போக்கும் வகையில் நீதிமன்றிற்கு அருகில் வாகனத்தரிப்பிடம் அமைப்பதற்கு ஏதுவாகக் கால்கோளிடும் நிகழ்வு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி. பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகளில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.