தாயின் உடலையாவது மீட்டுத்தாருங்கள் : மகன் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள்!!

207


மத்திய கிழக்கு நாடொன்றில் வேலைக்குச் சென்ற நிலையில், உயிரிழந்த தனது தாயின் உடலையாவது மீட்டுத்தாருங்கள் என உயிரிழந்த பெண்ணின் மகன் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கெக்கிராவ கிதுல்ஹிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த நெல்கா திபானி குமாரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
“கடந்த 2011ஆம் ஆண்டு வேலைவாய்ப்பொன்றை பெற்றுக்கொண்டு சவுதிக்குச் சென்ற குறித்த பெண், 2013ஆம் ஆண்டு மீண்டும் நாட்டிற்கு திரும்ப இருந்த நிலையில், ஊதியம் வழங்காது கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அன்று முதல் தனது தாயை தொடர்புகொள்ள முடியாமல் போனது. பின்னர் கடும் சிரமங்களுக்கு மத்தியில் 2014ஆம் ஆண்டு தாயை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்.
பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தனது தாய் மூன்று மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனது தாயை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அது பயனளிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி தனது தாய் உயிரிழந்து விட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலமாக தெரியப்படுத்தினார்.
தற்போது தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் கோரிக்கை கடிதம் எழுதி வருவதாக” அவரது மகன் மேலும் தெரிவித்துள்ளார்.