வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சை : பூதாகாரமாகி நிற்கும் முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

733


வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் பயன்பாடு தொடர்பான மோதல் மீண்டும் பெருவெடிப்பாக மாறியிருக்கிறது. அரச பேருந்துகள் தமது சேவையை நிறுத்திப் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த இழுபறி கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ந்து வருகின்றது.



அதனை ஆறப்போட்டு ஆறப்போட்டு பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று முதலமைச்சரும் முயன்று முயன்று இயலாமல்போக, அதிரடியாகச் சில முடிவுகளை அறிவித்தார். அது இப்போது பூதாகரமாகி நிற்கின்றது.

வவுனியா மத்திய பேருந்து நிலையம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. சிறிய நெருக்கடியான வவுனியா நகரினுள் பேருந்து நிலையமும் இருப்பதால் மேலும் நெருக்கடியும் போதாமைகளும் இருக்கின்றன.



அரச பேருந்து நிலையம் நகரின் மத்தியில் இருப்பதால் தனியார் பேருந்துகளும் நகரில் உள்ள குறுக்கு வீதிகளில் நின்றே சேவைகளில் ஈடுபடுகின்றன.இது நகரினுள் போக்குவரத்து நெரிசலை இன்னும் அதிகமாக்குகின்றது.



வவுனியா நகர விரிவாக்கத் திட்டங்களின் கீழ் பேருந்து நிலையம் நகரின் மையத்தில் இருந்து அகற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.


இதன் அடிப்படையில் புதிய பேருந்து நிலையம் 195 மில்லியன் ரூபா செலவில் தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் முக்கால் கிலோ மீற்றர் தூரத்தில் யாழ் வீதியில் அமைக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு தை மாதத்தில் அது திறந்து வைக்கப்பட்டது. திறந்த அன்று தவிர ஒரேயொரு நாள்கூட கடந்த வருடத்தில் அந்த நிலையத்தில் இருந்து சேவைகள் இடம்பெற்றதில்லை.
இந்தப் பிரச்சினையின் பின்னணியில் கட்சி அரசியல் பலமாகக் காலூன்றி நிற்கின்றது என்கிற குற்றச்சாட்டும் உண்டு.


தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒரு தரப்பிலும் அரச போக்குவரத்துச் சேவையினர் ஒரு தரப்பிலுமாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இது ஒருபுறமிருக்க வவுனியா நகர வர்த்தகர்களும் அரச போக்குவரத்துச் சேவையினர் பக்கமே நிற்கின்றனர். பேருந்து நிலையத்தை நகரின் மத்தியில் இருந்து அகற்றி விட்டால் தமது வர்த்தக நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு விடும் என்பது அவர்களின் கரிசனை.

வவுனியா நகருக்குள் காணப்படும் இட நெருக்கடியை ஒப்பிடும்போது வர்த்தகர்களின் இந்தக் கோரிக்கை உண்மையில் நியாயமானது அல்ல.

நகரின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நவீன மயமாக்கலின் கீழ் வர்த்தக நடவடிக்கைகள் விரிவாகும்போது பேருந்து நிலையம் அங்கு அமைந்திருப்பது வர்த்தகர்களுக்குத்தான் தலையிடியாக அமையும். எனவே பேருந்து நிலையத்தை அங்கு தக்க வைப்பதற்கு வர்த்தகர்கள் எடுக்கும் முயற்சி ஏற்புடையதல்ல.


தமது வர்த்தகம் பாதிக்கப்படாத வகையில் பேருந்து சேவையை நகருக்குள் ஈர்ப்பது குறித்த மாற்று வழிகளைத்தான் அவர்கள் உண்மையில் நாடவேண்டும். அதுதான் அவர்களுக்கும் நகருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் தனித் தனியாக அன்றி ஒரே இடத்திலிருந்து சேவையில் ஈடுபடுவதே தற்போதைய முரண்பாடுகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

நிலையத்தை அரச மற்றும் தனியார் பகுதிகளாகப் பிரித்து விட்டால் இந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விடும் என்று அரச போக்குவரத்துச் சேவையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் தற்காலிகமான ஓர் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இது ஓர் சரியான உபாயமாகவும் இருக்கக்கூடும் என்பதால் அதனைப் பரிசீலித்துப் பார்ப்பதிலும் தவறில்லை.

அரச போக்குவரத்துச் சேவையினரிடம் 35 பேருந்துகளே உள்ள நிலையில் தனியாரிடம் 150 பேருந்துகள் உள்ளன. இதனால் தனியார் சேவைகளின் ஆதிக்கத்தில் தமது தனித்துவத்தை இழந்து விடப்போகின்றோம் என்கிற அரச சேவையினரின் ஆதங்கமும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றே!

சம்பந்தப்பட்ட தலைவர்களும் பேருந்து சேவை பிரதிநிதிகளும் இணைந்து பேசி இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

தலைவர்கள் இருந்த இடத்தில் இருந்து முடிவுகளை எடுக்காமலும் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் விடாப்பிடியாக நிற்காமலும் இருப்பதன் மூலமே அதனைச் சாத்தியமாக்க முடியும்.

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல நிற்காமல் பொதுமக்களின் நலன் கருதி இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டியது இந்தத் தரப்பினர் அனைவரதும் கடமை.

-உதயன்-