கேந்திர முக்கியத்துவம்மிக்க வவுனியா பேரூந்து நிலையம் : ஓர் பார்வை!!

1145


வவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும் வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது.



போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் இதன் முக்கியத்துவம் கருதி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக பிரகடனம் செய்யாத சமாதான வலயமாக நீண்ட காலம் கையாண்டு வந்தனர். இந்த விடயம் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் வவுனியா நகரம் முக்கியத்துவம் மிக்கது என்பதை காட்டிநிற்கின்றது.

தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் வடக்கினதும் தெற்கினதும் இணைப்புப் பாலமாக வவுனியா நகரம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. வவுனியாவை தம்புள்ள, குருநாகல், பிபிலை, போன்ற சந்தி நகரங்கள் அட்டவணையில் இணைக்கமுடியும் .



சாதாரண சூழ்நிலை நிலவிவரும் இக்காலத்தில் வவுனியாவிற்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பேரூந்துகள் மூலம் தினமும் ஆயிரக்கணக்காணோர் வந்து செல்கின்றார்கள் அல்லது வவுனியாவைக் கடந்து செல்கிறார்கள் .



இந்நிலையில் வவனியாவின் பேரூந்து போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் தேக்கநிலை இலங்கையின் அனைத்து பிரதேச பயணிகள் இடையேயும் குறிப்பாக வடக்கு நோக்கிய பயணிகளின் அதிர்வுகளை ஏற்படுத்தும் .


இதனால் தரமான சீரான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டிய அவசியம் வவுனியா போக்குவரத்துத் துறையினருக்கு இருக்கின்றது.

காலி, கொழும்பு, கதிர்காமம் , புத்தளம், இரத்தினபுரி , குருநாகல், அனுராதபுரம், பதுளை என நாட்டின் தென்பகுதி மலையகப்பகுதி மக்கள் வடக்கின் நுழைவாயிலாக வவுனியாவையே அடையாளம் காண்கின்றனர்.


அதுமட்டுமல்லாது கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண பயணிகளின் பொற்கதவாக (கோல்டன் கேற்) வவுனியா நகரம் விளங்குகிறது.

பல நகரங்களின் பயணிகளின் சங்மமம் இங்கு இருப்பதால் பயணிகள் இடம்மாறிச்செல்லும் (ராண்சிற்) பஸ் போக்குவரத்து மையமாகவும் இது சிறப்புப்பெறுகிறது. இதனால்தான் போக்குவரத்து நகரம் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.

அண்மைக்காலமாக நிலவிவந்த போக்குவரத்து சீரின்மை தற்போது முடிவுக்கு வந்திருப்பது பலருக்கு பெரிய நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. சில வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் அது தற்காலிகமானதே. காலப்போக்கில் சமநிலை எல்லாவற்றிலும் ஏற்படும்.

ஒரு உறையினுள் இரண்டு வாள் நிலையில் தமது சேவைகளை செய்வதில் பலத்த போராட்டங்களை சந்தித்த இரு தரப்பினரும் முதலமைச்சரின் அதிரடி முடிவால் இன்று தமது அனைத்து எதிர்ப்புகளையும் கைவிட்டு ஒரு குடையின் கீழ் சேவையில் ஈடுபடத்தொடங்கியுள்ளமை பாராட்டப்படக்கூடியது.


இது வடமாகாணத்தில் உள்ள தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்து சபையினரின் ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையின் ஒரு நல்ல முன் உதாரணமாக மாறி இருக்கின்றது.

காலப்போக்கில் ஏனைய மாவட்டங்களிலும் முதலமைச்சர் இவ்வாறான ஒருங்கிணைந்த சேவையை அமுல் செய்ய ஆலோசனை வழங்கலாம் .

இன்தமிழ் இனியன்
செல்லத்துரை ஸ்ரீநிவாசன்
வவுனியா