வவுனியாவில் வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி!!

1389


 
‘தடைகளை நீக்கினால் எமது சாதனைகளும் சரித்திரம் படைக்கும்’ என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (Seed) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வானது பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று இறுதி நாள் நிகழ்வானது நேற்று முன்தினம் (24.02) வவுனியா தேக்கவத்தை பொது விளையாட்டு மைதானத்தில் 300 க்கும் மேற்பட்ட விருத்தினர்களின் முன்னிலையில் நிறைவிற்கு வந்தது.

இவ் விளையாட்டு நிகழ்வானது வெறுமனே விளையாட்டு நிகழ்வாக மாத்திரம் அமையாமல் மாறாக விசேட தேவைக்குட்பட்டவர்களின் உரிமைகள் சார்பான விழிப்புணர்வும் அவர்களின் திறன்களை வெளிகொண்டு வருவதாகவும் அமைந்திருந்தது.



கருத்தோன்றியுள்ள இவ் விளையாட்டு போட்டியை கௌரவப்படுத்தும் நோக்கில் விசேட மற்றும் பிரதம அதிதிகளாக வவுனியா உதவி மாவட்ட செயலாளர் கமலதாஸ், வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர் கா.உதயராஜா ஆகியோர் கலந்து கொண்டதுடன்,

சிறுவர் உரிமை மேம்பாடு அதிகாரி கெனடி, ஓய்வு பெற்ற கல்வியற்கல்லூரி பீடாதிபதி சஹாப்தீன், மாவட்ட சமூக சேவை அதிகாரி இராஜசேகர், விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன், பாடசாலை அதிபர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களான ஒகான் மற்றும் வரோட் நிறுவன உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு அங்கத்தவர்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வின் கொடியேற்றும் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக வவுனியா உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் மாவட்ட கொடியினை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராஜாவும் சீட் நிறுவன கொடியினை சீட் நிறுவன இயக்குனர் திருமதி.வாசுகி இராஜேந்திரனும், சீட் – விசேடபாடசாலை கொடியினை இணைப்பாளர் சு.சந்திரகுமாரும், காலச்சக்கர இல்ல கொடியினை மாணவி செல்வி. சுகததாச சஞ்சுலாவும் வண்ணச்சிறகுகள் இல்லக்கொடியினை மாணவன் ரவிக்குமார் – பிரகாஸ் ஆகியோர் ஏற்றி வைத்து கௌரவப்படுத்தி இருந்தனர்.



அத்துடன் இந்த விளையாட்டு நிகழ்வை திறன்பட நடாத்துவதற்கான நடுவர் குழாமை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி வழங்கி இருந்தமையும் விசேட அம்சமாகும்.


அத்துடன் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக வாழ்த்துச் செய்தியினை சிறுவர் உரிமை மேம்பாடு அதிகாரி ஜெ.கெனடி வழங்கினார்.

இதில் இயற்கை வளப்பாதுகாப்புடன் பராம்பரிய முறைகள் மற்றும் அனைவரும் ஒன்றிணைந்தால் உட்படுத்தல் சாத்தியம் என்கின்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாக இல்ல அமைப்புக்களும் வினோத உடை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் சாதாரண பாடசாலைகளுக்கு நிகராக நடைபெற்றது என்பது விசேட அம்சமாகும்.