வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் : கொஞ்சம் சிரியுங்கள்!!

602

சீருடன் வாழ சிரியுங்கள் என்பது முதியோர் வாக்கு. ‘நீங்கள் சிரிக்கும் பொழுது உலகமே உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், எப்பொழுதும் அழுது கொண்டிருந்தால் தனியாகவே நீங்கள் அழ வேண்டும்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு ,உடை, உரையுள் என்பன எவ்வாறு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத காரணிகளாக அமைகின்றனவோ அதேபோன்று சிரிப்பும் மனித வாழ்க்கைக்கு தேவையான ஒரு காரணியாகவே அமைகின்றது.

”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது எங்களை அறியாமலே எங்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றது.

கவலையால் தோன்றும் நோய்கள்

நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும்
பலத்தை இழக்கச் செய்யும்
பலவகை ஏக்கங்களை உண்டாக்கும்
மூளைக்கோளாறு
இரத்த அழுத்தம்
இருதய நோய்

சிரிப்பை மறந்து கவலைப்படும் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.

கவலைக்கு மருந்து

கவலைக்கு மறுந்து சிரிப்பு ஆகும், எனவே கவலை அதிகமாக இருந்தால் மிகுதியாக சிரிக்க முற்படுவது நல்லது. எல்லா இடையூறுகளையும் போக்கச் சிரிப்பு பெரும் அளவில் உதவி செய்யும்.

கவலைப் படுவது தேவையற்றது கவலைப்படுவதால் கவலைகள் மனிதனை விட்டு ஓடிப்போதில்லை, கவலைகளை மறக்க முயல வேண்டும்.கவலைகளை மறக்க பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம்,மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் .

நம்மிடம் நிலையாகக் குடியேறிவிட்ட துன்பங்களை எதிர்க்காமல், அவைகளை ஏற்றுக் கொண்டு, அவைகளினால் உண்டாகும் அசௌகரியங்களுக்கு பழக்கப்பட்டு அந்த துன்பங்களைப் பற்றிய நினைவுகளே எழாத மனநிலையை வளர்த்துக் கொள்வது தான் சிறந்தது.

சிரிப்பினால் ஏற்படும் நன்மைகள்

மனிதனுக்கு சிரிப்பும்,நகைச்சுவையும் இயல்பானது, சிரிப்பு அதிக விறைப்பை உண்டு பண்ணுகின்றது. உணர்ச்சிகளை தன் வசப்படுத்தி அகற்றுகிறது. அதனால் உடற் கிரியைகள் அமைதியுடன் நடைபெறுகின்றன.

நன்றாக சிரிப்பதால் வயிறு, மார்பு போன்ற இடங்களில் உள்ள தசைகளுக்கு நல்ல ஓய்வு கிடைக்கின்றன.எனவே மூச்சுவாங்குவது எளிதாகின்றது,மூச்சு முறையாகவும் கட்டுப்பாட்டுடனும் இயங்குகிறது.

நன்றாக சிரிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வர், உண்மையான சிரிப்பு, பயம், வேண்டாத கனவுகள் போன்றவற்றை போக்கும்.

சிரிப்பு தனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நன்மை தரும், சிரிப்பைக் கொடுப்பவனுக்கும் பெருமை, வாங்குபவனுக்கும் பெருமை, பார்க்கின்றவர்களுக்கும் பெருமை, சிரிப்பு மனித குல ஒற்றுமைக்கு உதவுகிறது.

சிரிப்பு ஒரு மகிழ்ச்சியான உணர்ச்சியாகும். மனிதனை மனிதனாக வாழ வைக்கும். சமூக எழுச்சியைத் தரும்,உடல் நலத்தைக் காத்து நல் வாழ்வு வாழச் செய்யும்,

தன்னம்பிக்கையை வளர்க்கும், சமூதாயத்தில் எதிர்நீச்சல் போட உறுதியை கொடுக்கும்,நிலையான சாதனைகளை செய்ய உறுதுணையாக நிற்கும்.

”வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பதற்கிணங்க நோய்களை விலை கொடுத்து வாங்கும் இந்த காலத்தில் செலவின்றி நம் உடலில் இருக்கும் பல நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்ட சிரிப்பை உலோபமின்றி வௌிப்படுத்துங்கள்.

இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து,செயற்கரிய செயல்களைச் செய்து நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ மனந்திறந்து சிரியுங்கள்.