வவுனியாவில் மாவீரர்களின் தந்தை நிர்க்கதியில் : முதியோர் இல்லத்தின் சேர்த்துவிடுமாறு கோரிக்கை!!

675


விடுதலைப்போராட்டத்திற்கு தனது இரண்டு பிள்ளைகள் மாவீரர்களான நிலையில் வவுனியாவில் கடந்த சில தினங்களாக ஆதரவற்ற நிலையிலிருந்த வயோதிப 88 வயதுடைய தந்தை ஒருவர் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பிடம் உதயிகோரியுள்ளார்.



இதையடுத்து குறித்த வயோதிபரை வயோதிபர் காப்பகம் ஒன்றில் சேர்த்து விடுவதற்கு நிர்வாக நீதியான பிரச்சினைகளை அணுகவேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக அவரை ஒரு விடுதியில் வைத்து பராமரித்து வருவதுடன் அவருக்குத் தேவையானவற்றையும் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வயோதிபரை வயோதிப காப்பகம் ஒன்றில் இணைத்துக்கொள்வதற்கு அதிகாரிகள் முன்வந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.



யாழ்ப்பாணம், பொலிகண்டியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை பொன்னையா நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக இடம்பெயர்ந்து முல்லைத்தீவில் வசித்து வந்துள்ளார்.



இறுதி யுத்தத்தின்போது தனது மூன்று பிள்ளைகளில் இரண்டுபேரை விடுதலைப்போராட்டத்தில் இணைந்து மாவீரர்களாகியுள்ளனர். இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து வரும்போது தனது மற்றைய மகனும் காணாமல்போயுள்ளார்.


இதையடுத்து மனைவியையும் பறிகொடுத்த நிலையில் வவுனியா வந்து சேர்ந்த குறித்த வயோதிபர் தன்னாலான வேலைகளைச் செய்து இயலுமானவரை வசித்து வந்துள்ள நிலையில் தற்போது மிகவும் உடல் ரீதியாக தளர்வடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் செய்வதறியாது உதவிகோரியுள்ளார்.

தனக்கு யாசகம் செய்ய முடியாத நிலையிலே தற்போது தன்னை ஒரு முதியோர் காப்பகம் ஒன்றில் சேர்த்துவிடுமாறும் கோரியே தமிழ் விருட்சம் அமைப்பிடம் உதவிகோரியுள்ளார்.


இதையடுத்து தமிழ் விருட்சம் அமைப்பினரால் குறித்த வயோதிபரை காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருவதுடன் நிர்வாக ரீதியான நடைமுறைச்சிக்கல்களை அணுகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் அதிகாரிகள் முன்வந்து ஒத்துழைப்பினை வழங்குவதுடன் குறித்த வயோதிபரை காப்பகத்தில் சேர்த்து அவருக்கு உதவிபுரிய முன்வருமாறு கோரியுள்ளனர்.