தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்த ஹெலிகொப்டர் : செல்பி எடுத்துக் கொண்ட மாணவிகள்!!

488

 
தமிழகத்தில் குரங்கணியில் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க வந்த ஹெலிகொப்டருடன், ஆசிரியர் பயிற்சி மாணவியர் செல்ஃபி எடுத்துக் கொண்டது காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில், மலையேற்றம் சென்றவர்கள் 36 பேர் சிக்கினர், இவர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தீயில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டது.

ஹெலிகாப்டரை நிறுத்த வசதி இல்லாததால், தற்காலிகமாக போடி ஸ்பைசஸ் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதனைக் கண்ட ஆசிரியர் பயிற்சி மாணவியர், ஹெலிகாப்டரை நோக்கி சென்றனர்.

தீக்காயம் அடைந்தவர்களுக்கு உதவுவதற்காக மாணவியர் செல்கிறார்கள் என அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், மாணவியர் ஒன்றாக இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சில மாணவியர் தனியாக நின்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர், தங்களது ஆசிரியர்களுடன் ஒன்றாக நின்று மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

மாணவியரின் இந்த செயல், பொதுமக்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. மேலும், மக்களிடையே மனிதநேயம் குறைந்து வருவதை இவர்களின் செயல் காட்டுகிறது.