வவுனியாவில் தமிழ் கட்சித் தலைமைகளின் தவறால் சபைகளில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலை!!

295


தமிழ் தேசியத்திற்குட்பட்ட தமிழ் கட்சி தலைமைகளின் தவறால் வவுனியா மாவட்டத்தில் 4 உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா தெரிவித்துள்ளார்.



வவுனியா விவசாயதிணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக விவசாய ஸ்தாபனத்தின் நிதிஉதவியுடன் 214 போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமையான விவசாயிகளுக்கு இலவசமாக உள்ளிட்டு பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரிந்து சென்று பல தரப்பட்ட கொடிகளை பிடித்திருக்கிறார்கள். இதனால் வவுனியா மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து இரண்டு மாதகாலமாகியும் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஆட்சியமைப்பில் பிரச்சினையாகயிருக்கிறது.



தமிழ்கட்சிகள் ஒன்றுணைந்து இன்றுவரை ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது. இந்த தலைவர்கள் தமிழ் மக்களை எங்கு கொண்டு போய்விடப்போகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.



இந்த வகையில் ஒவ்வொரு தமிழ் கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள் என்றே நான் கருதுகின்றேன். தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகின்றோம் என்று கூறிக்கொண்டு இவ்வாறு செய்வது தவறானது.


இனியாவது ஒன்றுபட்டு தமிழ்மக்களுக்காக தமிழ்தேசியத்தை உருவாக்கவேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் பல தரப்பட்ட கேள்விக்களுக்கு விடையளித்துள்ளார்கள்.

ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் தாங்கள் தான் இந்த தேர்தலில் வென்றுள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு தமிழ் கட்சியும் உண்மையில் வெற்றிபெறவில்லை.


இந்த தேர்தலில் கூட மக்கள் ஏன் இவ்வாறு வாக்களித்துள்ளார்கள் என்று கூட இந்த கட்சித்தலைவர்கள் இன்னமும் உணரவில்லை. ஆகவே தமிழ் மக்களுடைய தேவைகளை உணர்ந்து தமிழ் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் அதற்கு நான் உதவி புரிய தயாராகவிருக்கின்றேன் என்று தெரிவித்தார்.