கல்லீரல் நோயால் உயிருக்குப் போராடும் 03 வயதுச் சிறுவன் சிகிச்சைக்காக இந்தியா பயணம்!!

398


கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டியிருந்த 03 வயதுடைய சாமிக ஹர்ஷன என்ற சிறுவன் இன்று சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.



நவகத்தேகம பிரதேசத்தில் கல்லீரல் நோய் பாதிப்பால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் சோக சம்பவம் தொடர்பில் அத தெரண இதற்கு முன்னர் செய்தி வௌியிட்டிருந்தது.

05 வயதுடைய ஜினுலி பிந்தராவிற்கு ஒன்றரை வருடத்திற்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், 03 வயதுடைய சாமிக ஹர்ஷனவிற்கு 03 மாதங்களுக்குள் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் செய்தி வௌியிடப்பட்டது.



சாமிக ஹர்ஷனவின் சத்திர சிகிச்சைக்காக மாத்திரம் 10 மில்லியன் ரூபா நிதி தேவைப்பட்டிருந்த நிலையில், அத தெரண வௌியிட்ட செய்தியின் பின்னர் அந்த நிதியை பெற்றுக் கொள்ள முடிந்ததாக பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் தந்தை கூறியுள்ளார்.



அதன்படி வெறும் கனவாக இருந்த 10 மில்லியன் ரூபா நிதி, தனவந்தர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டதையடுத்து 03 வயதுடைய சாமிக ஹர்ஷன சத்திரசிகிச்சைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் இன்று காலை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இந்த இரண்டு சிறுவர்களுக்கும் மூன்று மூத்த சகோதர சகோதரிகள் இருந்துள்ளதுடன், அவர்கள் சிறு வயதிலேயே கல்லீரல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.