வவுனியா யுவதி வாழைச்சேனையில் படுகொலை : விசாரணையில் புதிய திருப்பம்!!

301

 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகச் சமீபமாக மகாவலி கிளை ஆற்றில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வவுனியா யுவதி பற்றி விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கணேசபுரம் மரக்காரம் பளை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மருதை சுதர்சினி (வயது 33) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று
இலங்கை திரும்பிய நிலையில் அவரது சடலமும் சில உடமைகளும் கடந்த 18ம் திகதி வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபானின் முன்னிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வந்த வாழைச்சேனைப் பொலிஸார் இதுவரை சுமார் 15 இற்கு மேற்பட்டோரை விசாரணை செய்துள்ளதுடன் ஒரு முச்சக்கரவண்டிச் சாரதி உட்பட சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்து அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இந்த படுகொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபரும் அவரது குடும்பமும் பற்றிய தகவல்கள் தெரிய வந்திருப்பதாகவும். ஆயினும், குறித்த நபரும் அவரது குடும்பமும் பிரதேசத்திலிருந்து தப்பித் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் சிசிரிவி காணொளிக் கமெராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 18.03.2018 அன்று கிரான் பிரதேச செயலகத்திற்குச் செல்லும் வீதியில் கிரான் பிரதேச செயலகத்திற்குச் சமீபமாக மரங்களடர்ந்த பகுதியில் மகாவலி கிளை ஆற்றின் கரையில் இறந்த இந்த யுவதியின் சடலம் கிடப்பது பற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில் சடலம் காணப்பட்ட மகாவலி கிளை ஆற்றின் சற்றுத் தொலைவின் ஒரு பகுதியில் சுதர்சினி அணிந்திருந்ததாக நம்பப்படும் காலணிகள், காதணி, கொண்டைக் கௌவி, சுதர்சினியைத் தாக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படும் உடைந்த போத்தல் கண்ணாடிகள், இரத்தக் கறை, தலைமுடி என்பனவும், இன்னும் சற்றுத் தொலைவில் சுதர்சினியின் சூட்சேசும் அதற்குள் பெண்கள் அணியும் உள்ளாடைகள், சுகாதாரத் துவாய்கள், வாசனை சோப்கள் உள்ளிட்ட இன்னும் சில பொருட்கள் மீட்கப்பட்டன.

ஆற்றின் வேறொரு இடத்தில் ஆற்று நீரோட்டத்தில் கரையொதுங்கியவாறு இன்னொரு பொதிக்குள்ளிருந்து வெதுப்பி உபகரணமும் மீட்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட சுதர்சினியின் தந்தை கடந்த 10 வருடங்களுக்கு முதல் இந்தியாவுக்குச் சென்ற வேளையில் காணாமல் போய்விட்டார்.

அதன் பின்னர் தனது 3 பெண் மகள்களையும் ஒரு ஆண் மகனையும் வளர்ப்பதற்காக சுதர்சினியின் தாய் வவுனியாவிலுள்ள உணவு விடுதியொன்றில் கூலித் தொழில் செய்து வந்த வேளையில் விபத்தொன்றில் சிக்கி கால் முறிந்தபோது குடும்பக் கஸ்டம் காரணமாக சுதர்சினி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்று நாடு திரும்பிய வேளையிலேயே மிருகத்தனமாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.