2018 – விளம்பி வருஷப் பிறப்பு : செய்ய வேண்டிய கருமங்கள்!!

454


எதிர்வரும் 14.04.2018 சனிக்கிழமை புதிய விளம்பி வருஷம் காலை 7.00 மணியளவில் அபரபக்க திரயோதசி திதியில், வணிசக் கரணத்தில், மேட லக்கினத்தில், சிங்க நவாம்சத்தில் சனி காலவோரையில், புதன் சூக்கும வோரையில், தாமத குண வேளையில் நட்சத்திர பக்ஷியாகிய மயில் உண்டித் தொழிலும் சூக்கும பக்ஷி துயில் தொழிலும் செய்யும் காலத்தில் பிறக்கின்றது.



விஷு புண்ணிய காலம் – 14.04.2018 சனிக்கிழமை அதிகாலை 03.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை விஷு புண்ணிய காலமாகும்.

மருத்து நீர் ஸ்நானம் – இப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கற்பித்து ஆலயங்களில் வழங்கப்படும் மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றை இலையும் காலில் ஆலிலையும் வைத்து முறைப்படி ஸ்நானம் செய்தல் வேண்டும்.



அணிய வேண்டிய ஆடைகள் – சிவப்பு நிறமுள்ள பட்டாடையாயினும் சிவப்பு அல்லது கறுப்பு கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிதல் வேண்டும். அத்துடன் பவளம், நீலக்கல் பதித்த ஆபரணங்களை அணியலாம்.



வழிபாடுகள் – முதலில் விக்னேஸ்வரர் அதன்பின் குல தெய்வ வழிபாடு செய்து, தொடர்ந்து சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து, குரு, பெற்றோரை வணங்கி ஆசி பெற்று, தானதருமங்கள் இயற்றி உறவினர்களுடன் அளவளாவி அறுசுவை உணவுடன் பிட்டு புசித்து கண்ணாடியில் தரிசனம் செய்து புதிய வருஷ பலன்களை கேட்டு அறிந்து கொள்ளவும்.


தோஷ நட்ஷத்திரங்கள் – பூசம், மகம், பூரம், உத்தரம் 1ம்,2ம் கால்கள், அனுசம், பூரட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து, இயன்ற தானதருமங்கள் செய்து சங்கிரம தோசத்தை நிவர்த்தி செய்துகொள்ளல் வேண்டும்.

கைவிசேஷ நேரங்கள் – 14.04.2018 – மதியம் 12.15 முதல் பிற்பகல் 02.10 மணி வரை – மாலை 06.21 முதல் இரவு 08.13 மணிவரை, 16.04.2018 – மதியம் 12.30 முதல் பிற்பகல் 02.02 மணி வரை – மாலை 06.13 முதல் முன்னிரவு 07.24 மணி வரை..


மூலம் – வாக்கிய பஞ்சாங்கம்