தங்கம் வென்று சாதித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்!!

449

கொமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

கடந்த புதன்கிழமை முதல் அவுஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கொமன்வெல்த் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இதில் வியாழன் அன்று நடைபெற்ற 48 கிலோ மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்றார்.

போட்டியின் இரண்டாவது நாளான நேற்று 53 கிலோ எடைப் பளுதூக்குதல் போட்டி பிரிவில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதலில் பங்கேற்ற குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று 77 கிலோ ஆண்கள் பளுத்தூக்கும் பிரிவில் 317 கிலோ பளுவை இரண்டு பிரிவுகளாக தூக்கி இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.

இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் இரண்டாவது இடத்தையும் அமெரிக்க வீரர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தனது மகன் தங்கப் பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சதீஷ்குமார் ஏற்கெனவே பி.ஏ. படித்து தென்னக ரயில்வேயில் பணியில் சேர்ந்த பின்னர் இவர் 2010, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களைத் வசப்படுத்தியுள்ளார்.

கொமன்வெல்த் போட்டிகளில் 2014ம் ஆண்டு பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற பின்னர் கொமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.