வவுனியா நகரசபையின் உபதவிசாளராக சுந்தரம் குமாரசுவாமி தெரிவு!!

665

வவுனியா நகரசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று(16.04.2018) காலை நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆதரவாக 9 வாக்குகளும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு , ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தனர்.

வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இ.கௌதமன் தெரிவு!!

வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இராசலிங்கம் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு இவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (16.04.2018) காலை வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் சேனாதிராசா மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமன் ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.

பகிரங்க வாக்களிப்பின் போது சேனாதிராசா 09 வாக்குகளையும் கௌதமன் 11 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணியின் கௌதமன் வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவாகியுள்ளார்.

வவுனியா நகரசபையைக் கைப்பற்றுவது யார் என்பதில் பல நாட்களாக இழுபறி நிலவிவந்த நிலையில் இப் பிரச்னை இன்று ஒருவாறாக முடிவிற்கு வந்துள்ளது.