வவுனியா செட்டிகுளம் பிரதேசசபை சுதந்திரக் கட்சி வசம்!!

368


 

தமிழரசுக்கட்சி பெரும்பான்மை பெற்ற செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர கட்சி ஆட்சியமைத்துள்ளது.
தலைவர், உப தலைவர் தெரிவு இன்று பிற்பகல் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.



தவிசாளர்பதவிக்காக 3 பேர் போட்டியிட்டமையால் வாக்கெடுப்பிற்கு சென்றது. உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைவாக பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது. சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி 7 வாக்குகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சு .ஜெகதீஸ்வரன் 5 வாக்குகளையும், தமிழர் விடுதலை கூட்டணியின் யேசுதாஸ் டெல்சன் 3 வாக்குகளையும் பெற்ற நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற டெல்சன் நீக்கப்பட்டு ஏனைய இருவருக்கும் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதில் சுதந்திர கட்சியை சேர்ந்த 4பேரும் ஐக்கியதேசிய கட்சியின் 2பேரும் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒருவரும் ஆசிர்வாதம் அந்தோணிக்கு வாக்களித்தனர், கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரனுக்கு கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர். இதனால் ஆசிர்வாதம் அந்தோணி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.



இதேவேளை உபதலைவருக்கான போட்டியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நவரட்ணம் சிவாயினி மற்றும், கூட்டமைப்பு சார்பில் சி.அருள்கரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சிவாயினி 7 வாக்குகளும், அருள்கரன் 6 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில் ந.சிவாயினி உபதலைவராக தெரிவு செய்யபட்டார்.



இதேவேளை தலைவர் மற்றும் உப தலைவருக்கான தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர் நடுநிலை வகித்திருந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தலைவர் தெரிவின் போது இரண்டாம் சுற்றிலும் உபதலைவருக்கான தெரிவிலும் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட இருவர் இன்றய சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.