வவுனியாவில் சறுக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம்!!

624

வவு­னியா நகர சபை மற்­றும் வெண்கலச் செட்­டிகு­ளம் பிர­தேச சபை என்­ப­வற்­றில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­ற­போ­தும் அந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைக்­கும் வாய்ப்பை இழந்­தது. வவுனியா நகர சபையை, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யும், வெண்க­லச் செட்­டிகு­ளம் பிர­தேச சபையை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் கைப்­பற்­றி­ன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்­காக தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் ஆதர­வைக் கோரி நேற்று முன்தினம் இரவு வரை­யில் பேச்சு நடத்­தி­யது. தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் இந்­தப் பேச்­சுக்­க­ளில் நேர­டி­யா­கப் பங்­கேற்­க­வில்லை. அவர் சார்­பில் மூன்­றாம் தரப்­பி­னரே, கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்சுக்­க­ளில் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

வவு­னியா வடக்கு பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் பதவியை­யும், வவு­னியா நகரசபை­யின் உப­த­வி­சா­ளர் பத­வி­யை­யும் அவர்­கள் கோரி­யி­ருந்­த­னர். கூட்­ட­மைப்­பும் அதற்கு இணங்­கி­யி­ருந்­தது. இறுதி நேரத்­தில் அவை எவை­யுமே வேண்­டாம் என்­றும், தாங்­கள் நடு­நி­லமை வகிக்­கப் போகின்­றோம் என்று கூட்­ட­ணி­யி­னர் தெரி­வித்தி­ருந்­த­னர். கூட்­ட­ணி­யி­னரை மசிய வைக்க கூட்டமைப்பு எவ்­வ­ளவோ முயன்­றது.

இந்த நிலை­யில் வவு­னியா நகர சபைத் தவி­சா­ளர் தெரிவுக்­கான அமர்வு நேற்­றுக் காலை ஆரம்­ப­மாகி, தவிசா­ளர் தெரி­வுக்­கான பெயர்­கள் முன்­மொ­ழி­யப்­ப­டும் வரை­யில், கூட்­டணி சார்­பில் ஒரு­வர் போட்­டி­யி­டப் போவது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குத் தெரி­யாது.

கூட்­ட­ணி­யி­னர், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீ­னின் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், சுதந்­தி­ரக் கட்சி, மகிந்­த­வின் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­ப­வற்­றின் ஆத­ர­வு­டன் தமது தவி­சா­ளரை அறி­வித்­த­னர்.

கூட்­ட­ணி­யின் இந்­தத் திடீர் நட­வ­டிக்­கை­யா­னால் கூட்டமைப்பு திக்­கு­முக்­கா­டிப் போய், இறு­தி­யில் தவிசாளர் பத­வியை இழந்­தது. கூட்­ட­மைப்­பின் இராஜதந்திர நட­வ­டிக்கை சறுக்­கி­யது.

-உதயன்-