வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

484

 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவுக்கான நிகழ்வு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு நெல்லுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக துரைச்சாமி நடராஜசிங்கம்(ரவி) பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 14 வாக்குகள் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த த.சிவராசா 13 வாக்குகளை பெற்றிருந்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவர் நடுநிலை வகித்திருந்த நிலையில் இருவர் வாக்களிக்கவில்லை.

உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகேந்திரன் 15 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எஸ்.குகதாசன் 14 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையில் 11 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவரும் சுயேட்சையில் இருவருமாக ஆதரவு வழங்கியிருந்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 30 உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் , வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், சிவாஜிலிங்கம், கே.கருணாதாச முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் நேற்று வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை இரண்டையும் இழந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்று வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.